புதுச்சேரி

விபத்தில் நொறுங்கிய ஆட்டோ, பெற்றோருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆறுதல் கூறிய படம்.

பள்ளிக்கு சென்ற ஆட்டோ பஸ் மீது மோதி மாணவிகள் 8 பேர் படுகாயம்- கவர்னர், முதலமைச்சர் ஆறுதல்

Published On 2023-06-20 06:59 GMT   |   Update On 2023-06-20 06:59 GMT
  • மாணவிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
  • பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

புதுச்சேரி:

புதுவை கடற்கரை சாலையையொட்டி ஓய்ட் டவுன் பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளிக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் ஆட்டோக்கள் மூலம் சென்று வருகின்றனர். 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த மாணவிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.

புஸ்ஸி வீதியில் வந்த ஆட்டோவும் அரசு மருத்துவ மனையிலிருந்து எதிரே வந்த தனியார் பஸ்சும் எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் விக்னேஷ்(22), பள்ளி குழந்தைகள் கோபாலன் கடையை சேர்ந்த தக்கிதா(9), மூலக்குளத்தை சேர்ந்த ஹர்ஷீதா(7), அரும்பார்த்த புரத்தை சேர்ந்த தீக்க்ஷா(6), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த கிரண்யா(10), மூலக்குளத்தை சேர்ந்த பூர்ணிகா (7), நிக்கிஷா (10), அவந்திகா (10), திஷா (10) ஆகிய 8 சிறுமிகளுக்கு தலை, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கியதால் அலறி கூச்சலிட்டனர்.

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் நிக்கிஷா(10), அவந்திகா (10) ஆகியோர் தலையில் படுகாயமடைந்திருந்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற சிறுமிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்து அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டு கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவலறிந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக வந்தனர். குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News