புதுச்சேரி

புதுச்சேரியில் மருத்துவ கலந்தாய்வுக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்

Published On 2023-10-19 08:01 GMT   |   Update On 2023-10-19 08:01 GMT
  • பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
  • புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மருத்துவ கலந்தாய்வு கமிட்டி உத்தரவிட்டது. புதுவையில் 3 கட்ட கலந்தாய்வுதான் நடந்துள்ளது.

பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும். இந்த உத்தரவுக்கான காலக்கெடுவும் முடிந்துள்ளது. இறுதி காலக்கெடுவுக்கு பின்னரும் சென்டாக் நிர்வாகம் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்து ஆணை வழங்கி வருகிறது.

இந்த மாணவர் சேர்க்கை ஆணை சட்டப்படி செல்லுமா? என பெற்றோர், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தள்ளிப்போனது.

இதை காரணம் காட்டி தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா ஆகியோர் தனித்தனியே மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இந்த 2 கடிதங்களுக்கும் மத்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

 

இந்த நிலையில் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைப்பது தள்ளிப்போனதால் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தள்ளிப்போனது.

எனவே புதுவையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News