ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.94 லட்சம் மீட்பு- திருடு போன 70 செல்போன்கள் பறிமுதல்
- ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
- பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மோசடி மற்றும் செல்போன் திருட்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அந்த செல்போன்களை யார் பயன்படுத்தி வருகிறார்கள்? என கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி புதுவையை சேர்ந்த 70 பேரின் செல்போன்களை போலீசார் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
இந்த செல்போன்களை காவல்துறை தலைமையகத்தில் அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி.பிரிஜேந்திரகுமார் யாதவ் வழங்கினார்.
மேலும் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து போலீஸ் டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடப்பாண்டில் மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தது தொடர்பாக 24 வழக்குகளில் 13 வழக்கில் ரூ.94 லட்சம் மீட்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைதாகி உள்ளனர்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.