புதுச்சேரி

'ரிலாக்சாக' உள்ள பா.ஜனதா கூட்டணி கட்சியினர்: நண்பரின் வாட்ச் கடைக்கு வந்து செல்லும் முதலமைச்சர்

Published On 2024-03-22 10:13 GMT   |   Update On 2024-03-22 10:13 GMT
  • தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலையொட்டி சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சட்டசபை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் வெளிநபர்கள், கட்சி நபர்கள், தொகுதி மக்கள் வர அனுமதி கிடையாது.

இதையடுத்து சட்டசபை நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு சட்டசபை செயலாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சட்டசபை காவலர்கள், நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டசபை அலுவலகம் அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் சட்ட சபையில் அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்கள் ரிலாக்சாக அமர்ந்து அரசியல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதுபோல் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று காலை வீட்டிலிருந்து சட்டசபைக்கு வரும் முன்பு, நேரு வீதியில் காரை நிறுத்தி விட்டு தனது நண்பரின் வாட்ச் கடைக்கு சென்றார். அங்கு சுமார் 1 மணி நேரம் வாட்ச் கடையில் ரிலாக்ஸாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பாதுகாவலர்களும் தங்களின் வாகனங்களுடன் அங்கு நின்றிருந்தனர்.

இதுகுறித்து முதல்-அமைச்சரின் ஆதரவாளர்கள் கூறும்போது,

சட்டசபைக்கு சென்றாலும் மக்களை சந்திக்க முடியாது. அதனால் வழக்கமாக வரும் தனது நண்பர் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் கூறுகையில், புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுகிறது. இம்முடிவு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையிலும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. பா.ஜனதாவினர் வேட்பாளர் அறிவிப்பில் மும்முரமான முயற்சியில் இருக்கின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் சட்டசபைக்கு வர அனுமதி இல்லை. இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போது ரிலாக்ஸாக உள்ளார்" என்று தெரிவித்தனர்.

மற்ற மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்த நிலையில் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்ற வேளையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News