குடியரசு தின விழா: புதுவை கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் தி.மு.க.
- புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார்.
- புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார். தொடர்ந்து மாலையில் ராஜ் நிவாசில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு, கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளிக்கிறார்.
இதற்கான அழைப்பிதழ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் கவர்னர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேநீர் விருந்துகளில் நானும் எங்கள் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று உள்ளோம்.
ஆனால் சமீப காலமாக புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.
இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.
ஆகவே, கவர்னர் தமிழிசை விடுத்துள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பை தி.மு.க. புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.