புதுச்சேரி

புதுவை வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி- சென்னை புரோக்கர்கள் 3 பேர் கைது

Published On 2023-07-20 05:28 GMT   |   Update On 2023-07-20 05:28 GMT
  • மோசடி செய்த நபர் ஹாங்காங்கில் இருப்பதும், அவரது தொடர்புடைய சிலர் சென்னையில் இருப்பதும் தெரியவந்தது.
  • ஒரே நாளில் ரூ.4 கோடி வரை பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூர் உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன். தனியார் நிறுவன ஊழியர்.

இவரது செல்போனுக்கு அண்மையில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட செயலியில் வரும் கட்டளைக்கு ஏற்ப பதிவிட்டால் செலுத்தும் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறப்பட்டிருந்து.

இதை நம்பிய வீரபத்திரன் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி பணம் இரட்டிப்பாகி யுள்ளது.

இதையடுத்து அவர் பல தவணைகளில் ரூ.7.08 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இரட்டிப்பான பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை.

இதுகுறித்து வீரபத்திரன் புதுச்சேரி இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

மோசடி செய்த நபர் ஹாங்காங்கில் இருப்பதும், அவரது தொடர்புடைய சிலர் சென்னையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களின் செல்போன், வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது ஒரே நாளில் ரூ.4 கோடி வரை பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் வங்கிக் கணக்கை பணப் பரிவர்த்தனைக்கு அனுமதித்தால் ரூ.1 லட்சம் தருவதாக மர்ம நபர் கூறியுள்ளார். அதன்படி பலரும் வங்கிக் கணக்கை மர்ம நபர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. அவ்வாறு 30 வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கினர்.

மேலும் மோசடிக்கு முகவர்களாக செயல்பட்டதாக சென்னை எண்ணூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முகமது இலியாஸ், பாடி பகுதியைச் சேர்ந்த மோகன், தமிழ்வாணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், ரூ.75 ஆயிரம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News