பா.ஜனதா-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் புதுவை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்கிறது: செல்வகணபதி
- வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
- கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவராக சாமிநாதன் கடந்த 2015-ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் நியமிக்கப்பட்டார்.
பா.ஜனதா தலைவர் பதவி 3 ஆண்டு காலமாகும். 2019 பாராளுமன்ற தேர்தல், கொரோனா பரவல் காரணமாக சாமிநாதன் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார்.
2021-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு சாமிநாதன் மாற்றப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனாலும், கடந்த 2 ஆண்டு காலமாக சாமிநாதனே பதவியில் நீடித்தார்.
இந்த நிலையில் கடந்த 8 ஆண்டு காலம் பா.ஜனதா தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டார். புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி. தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி.யை தேசிய தலைவர் நட்டா நியமித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். புதிய தலைவராக பொறுப்பேற்ற பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி கூறியதாவது:-
பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் புதுவை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். பா.ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். கூட்டணி கட்சி வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் வெற்றிக்கு பாடுபடுவோம்.
கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை. அவர்களின் ஆலோசனையை பயன்படுத்துவோம். கூட்டணி முடிவுகளை தேசிய தலைவர்கள் எடுப்பார்கள். அவர்களின் முடிவை செயல்படுத்துவது எங்கள் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செல்வகணபதி எம்.பி. 19.4.1957-ல் பிறந்தவர். எம்.ஏ. எம்.எட். படித்துள்ளார். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனர். விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா குழு தலைவர் பொறுப்பு வகித்து பல நிகழ்ச்சிகளை நடத்தினார். கலைமாமணி விருது வழங்கும் குழு உறுப்பினர், கைப்பந்து சங்க தலைவர், கம்பன் கழக பொருளாளர், லாஸ்பேட்டை திரவுபதி யம்மன் கோவில் செயலாளர், நரேந்திரா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் உட்பட பல பொறுப்புகளில் உள்ளார்.