கடற்கரை-சுற்றுலா தலங்களில் புழக்கத்தில் உள்ள 'ஸ்மோக் பிஸ்கெட்': கண்டு கொள்ளாத உணவு பாதுகாப்புத்துறை
- ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
- உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது.
புதுச்சேரி:
கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்டு சிறுவன் துடிதுடித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்மோக் பிஸ்கெட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்து, அதனை தடுக்க, தனிப்படை களம் இறக்கியுள்ளது.
புதுச்சேரியிலும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கெட்டுகள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திருமண விழாக்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்மோக் உணவு கிடைக்கிறது.
திரவ நைட்ரஜன் தான் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. காக்டெய்ல், மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் அல்லது திரவ நைட்ரஜன் கலந்து செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு அதனை வாங்கி கொடுக்கிறார்கள்.
உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது. இந்த டிரை ஐஸ்களை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.
இதுதொடர்பாக, தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஸ்மோக் பிஸ்கெட் விஷயத்தில் புதுச்சேரி அரசும், உணவு பாதுகாப்பு துறையும் மவுனமாக உள்ளது.
இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.