புதுச்சேரி

ஜிப்மரில் சேவை கட்டணம் திடீர் ரத்து- நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Published On 2023-05-11 07:57 GMT   |   Update On 2023-05-11 07:57 GMT
  • மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுவை மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது.
  • ஏழை மக்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடிக்கணக்கில் நிதி வழங்கி அனைத்து துறைகளையும் நவீனப்படுத்தி சிறப்பான சேவையாற்றி வருகிறது.

புதுச்சேரி:

புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென் மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தென் மாநில பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக நோயாளிகள் ஜிப்மருக்கு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 16-ந்தேதி 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியானது.

இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தின. ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்த கவர்னர் கண்டனம் தெரிவித்திருந்தார். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை ஜிப்மரில் தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அந்த அறிவிப்பில், கடந்த 16.3.2023-ந்தேதி வெளியிடப்பட்ட சேவை கட்டண சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் புதுவை, தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழை மக்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடிக்கணக்கில் நிதி வழங்கி அனைத்து துறைகளையும் நவீனப்படுத்தி சிறப்பான சேவையாற்றி வருகிறது.

கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், ஜிப்மர் இயக்குனர் சேவை கட்டணங்களை அமல்படுத்தினார். இதனால் ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நானும், பா.ஜனதா மாநில செயலாளர் ரத்தினவேல், விவசாய அணி தலைவர் புகழேந்தி ஆகியோர், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன் ஒப்புதலோடு டெல்லிக்கு சென்றோம்.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மேற்படி ஜிப்மரின் சேவை கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று மத்திய மந்திரி சேவை கட்டணங்களை ரத்து செய்ய துறையின் செயலரை அழைத்து உத்தரவு பிறப்பித்தார். இதன்படி ஜிப்மரில் அமல்படுத்தப்பட்ட சேவை கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எங்கள் கோரிக்கையை ஏற்று சேவை கட்டணங்களை ரத்து செய்ய ஆணை பிறப்பித்த மத்திய மந்திரி மன்சுக்மாண்டவியாவிற்கு புதுவை மாநில பா.ஜனதா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுவை மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது. ஜிப்மருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு அளிக்கும். ஜிப்மரில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி பா.ஜனதா சார்பில் உரிய நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News