முதலமைச்சர் ரங்கசாமியிடம் மருத்துவ செலவுக்கு பணம் பெற்ற தமிழக நோயாளி- வைரலாகும் புகைப்படம்
- ரங்கசாமி சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார்.
- திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு திலாசுப்பேட்டை அருகில் கோவில் எழுப்பி உள்ளார்.
இங்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை செய்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடந்த சனிக்கிழமை பூஜை முடித்து அன்னதானம் செய்ய சென்ற முதலமைச்சரை அங்கே அமர்ந்திருந்த ஒரு முதியவர் கைகூப்பி வணங்கினார்.
மேலும் தன் கையில் இருந்த ஒரு மருந்து சீட்டை காண்பித்து 'மருந்து வாங்க காசு இல்லை' என்றும் கூறினார். உடனடியாக முதல்-அமைச்சர் தனது சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார். அவர் யார் என்பது குறித்து அங்கு இருந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளியான அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2 கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிலில் அன்னதானம் நடைபெறுவது கேள்விப்பட்டு வந்ததாகவும் தெரியவந்தது.
அவருக்கு அன்னதானம் வழங்கி காவலர்கள் பஸ்சில் ஏற்றி அனுப்பினர். முதலமைச்சர் திருவண்ணாமலை நோயாளிக்கு எவ்வளவு தொகை கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. புதுவை முதலமைச்சரிடம் தமிழக நோயாளி பண உதவி பெறும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.