புதுச்சேரி

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை குறிவைக்கும் தமிழக வி.ஐ.பி.க்கள்

Published On 2024-02-13 09:23 GMT   |   Update On 2024-02-13 09:23 GMT
  • பெரிய மாநிலங்களில் எம்.பி. சீட்கள் அதிகளவில் இருக்கும்.
  • புதுவை தொகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடவில்லை.

புதுச்சேரி:

புதுவை ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பதை கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், புதுச்சேரி கவர்னர் தமிழிசை ஆகியோர் பெயர்கள் உலா வந்தது. இவர்களோடு புதுச்சேரியில் பணியாற்றும் வனத்துறை அதிகாரியின் பெயரும் அடிபட்டது. இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இதேபோல எதிர்கூட்டணியான காங்கிரஸ், தி.மு.க.வில் புதுவை பாராளுமன்ற தொகுதி யாருக்கு என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. காங்கிரசில் ஏற்கனவே சிட்டிங் எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கம் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், மேலிடத்தை அணுகி சீட் கேட்டு வருகிறார்.


இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் பெயரும் உலா வருகிறது. இவர் புதுவையை அடுத்துள்ள தமிழக பகுதியான வழுதாவூர் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர். இவர் கல்லூரிகளை நடத்தி வருகிறார். இவர் தனக்கு புதுவை பாராளுமன்ற தொகுதியில் சீட் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பெரிய மாநிலங்களில் எம்.பி. சீட்கள் அதிகளவில் இருக்கும். அங்கு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் புதுவையில் ஒரே ஒரு தொகுதிதான். 1971-ல் காங்கிரஸ் சார்பில் மோகன்குமாரமங்கலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு புதுவை தொகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடவில்லை.

ஆனால், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிகளவில் தமிழகத்தை சேர்ந்த வி.ஐ.பி.க்கள் பெயர் அடிபடுகிறது.

Tags:    

Similar News