ஜெயில் கைதிகள் 146 பேர் உடல் உறுப்பு தானம்
- கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்தவர்களின் இறப்புக்கு பின் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இந்த கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதாவது கைதிகளுக்கு யோகா, ஓவியம், சிற்பம் ஆகிய பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் உடற் பயிற்சி மற்றும் நடன பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறை சாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கரில் கைதிகளால் துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டு, 60 வகையான பழம், மூலிகை , காய்கறி செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அவர்கள் இது தொடர்பாக சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சாகரை சந்தித்து பேசினர்.
இது குறித்து ஜிப்மர் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜிப்மர் டாக்டர்கள், காலாப்பட்டு சிறைக்கு சென்று கைதிகளை சந்தித்து பேசினர். அப்போது 57 தண்டனை கைதிகள், 89 விசாரணை கைதிகள் என 146 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர். அவர்களுடன் சேர்ந்து ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர், கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் 2 அதிகாரிகளும் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட ஜிப்மர் டாக்டர்கள் அவர்களுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.
உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்தவர்களின் இறப்புக்கு பின் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.