புதுச்சேரி கடற்கரையில் பிரான்ஸ் தேசிய தின விழா கொண்டாட்டம்- வாண வேடிக்கையின் போது 4 பேருக்கு தீக்காயம்
- கடற்கரையில் 30 நிமிடம் நடந்த வாண வேடிக்கையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- வாண வெடிகள் குறைந்த உயரத்தில் வெடித்ததால் அதன் தீப்பொறிகள் அருகில் நின்றிருந்த பொது மக்கள் மீது விழுந்தது.
புதுச்சேரி:
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரஞ்சு துணை துாதரகத்தில் தேசிய தின விழா கொண்டாடப்பட்டது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரிக்கான பிரான்ஸ் துணை துாதர் லீஸ் தல்போ பரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவைத் தொடர்ந்து, இரவு வாண வெடி நிகழ்ச்சி நடந்தது. கடற்கரையில் 30 நிமிடம் நடந்த வாண வேடிக்கையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
அப்போது, வாண வெடிகள் குறைந்த உயரத்தில் வெடித்ததால் அதன் தீப்பொறிகள் அருகில் நின்றிருந்த பொது மக்கள் மீது விழுந்தது. அதில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ஓம்கார் (வயது21) பூர்னடா(22) உப்பளம் நேதாஜி நகர் கணபதி(38) மற்றும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ஆகிய 4 பேர்மீது வாணவெடி தீப்பொறி விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவத்தினால், கடற்கரை சாலையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.