புதுச்சேரி சட்டசபை அருகே அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு
- தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் ஏற்றிய வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
- இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் காலாப்பட்டு ரசாயன தொழிற்சாலை மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுப்புற சூழலையும், சுனாமி குடியிருப்பு மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் காப்பாற்றிட வலியுறுத்தி புதுவை சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் வடசென்னை தெற்கு, (கிழக்கு) மாவட்ட செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் புதுவை அ.தி.முக. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் ஏற்றிய வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்துக்கு காரணமான அந்த வாகன காண்ட்ராக்டர் யார்? அவர் திட்டமிட்டு அந்த விபத்தை ஏற்படுத்தினாரா? என்பது குறித்தும், அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக விபத்தை ஏற்படுத்தி அதற்குரிய இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.
ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே அவர்களின் உடல் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் இங்கிருந்து 4 மணி நேரம் மரண அவஸ்தையுடன் நோயாளிகளை சிகிச்சைக்கு அரசின் அனுமதியோடு கொண்டு சென்றனரா? அவ்வாறு கொண்டு செல்ல அதிகாரம் அளித்தது யார்? போகும் வழியிலேயே ஒரு நோயாளி மரணமடைந்திருந்தால் அதற்கு பொறுப்பு யார்?
ஜிப்மர் டாக்டர்கள் மறுத்தும் சென்னைக்கு கொண்டு சென்றது சம்பந்தமாக மருத்துவ புலனாய்வு நிபுணர்களை கொண்டு உயர்மட்ட விசாரணைக்கு முதலமைச்சர், கவர்னர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.