புதுச்சேரி

புகையிலை இல்லா இடமாக புதுச்சேரி கடற்கரை அறிவிப்பு

Published On 2023-07-29 04:43 GMT   |   Update On 2023-07-29 04:43 GMT
  • புகையிலையினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசினை குறைக்கவும் புதுச்சேரி ராக் கடற்கரையில் புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு பலகைகள் கடற்கரையில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

ஆண்டுதோறும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

உலகில் புகையிலை பயன்பாட்டினால் 12-ல் ஒருவர் பலியாகின்றனர்.

இந்தியாவில் 40 சதவீதம் புற்றுநோயால் இறப்பவர்கள் புகையிலை பயன்படுத்துபவர்கள். இதனால் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர்.

இதற்கிடையே தேசிய சுகாதார இயக்ககம் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் (அரசு மார்பு நோய் நிலையம்) மற்றும் புதுச்சேரி போலீஸ் துறை சார்பில் ராக் பீச் (புதுவை கடற்கரை) புகையிலை இல்லா கடற்கரையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், புகையிலை பாதிப்பில் இருந்து அவர்களை காக்கவும், புகையிலையினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசினை குறைக்கவும் புதுச்சேரி ராக் கடற்கரையில் புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடற்கரை சாலை முழுவதும் புகை பிடிக்க வேண்டாம் என்றும், புகையிலை பொருட்கள் வீசுவதை தவிர்க்கும் வகையில் கடற்கரைக்குள் எந்தவிதமாக புகையிலை பொருட்களையும் கொண்டு வர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு பலகைகள் கடற்கரையில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது.

இப்பலகையை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர். வெங்கடேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்வாதி சிங், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில ஆலோசகர் டாக்டர். சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News