புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் போதையில் பைக் ஓட்டி பெண் மீது மோதிய வாலிபர்

Published On 2023-08-26 03:52 GMT   |   Update On 2023-08-26 03:52 GMT
  • பைக் மோதியதில் காயமடைந்த பெண், சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
  • சம்பவ இடத்திற்குவந்த போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை சாலையில் எந்நேரமும் மக்கள் கூட்டம் இருக்கும்.

குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வருகைதந்து கடற்கரை அழகை ரசிப்பார்கள். மேலும் பலர் நடைபயிற்சியும் மேற்கொள்வார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு கடற்கரை சாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடியிருந்தனர். இரவு 11:15 மணிக்கு டூப்ளக்ஸ் சிலையில் இருந்து போலீஸ் தடைகளை மீறி பைக் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது.

இந்த பைக் தாறுமாறாக ஓடி தலைமை செயலகம் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட பெண் மீது மோதியது.

பைக் மோதியதில் காயமடைந்த பெண், சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்குவந்த போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் மரக்காணத்தைச் சேர்ந்த கார்த்திக் வேலு (வயது 28) என்பதும், நண்பர்களுடன் மதுகுடிக்க புதுச்சேரி வந்த இவர், போதையில் கடற்கரைச் சாலையில் பைக்கை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.

விபத்து ஏற்பட்ட போது கார்த்திக்வேலு பைக்கில் வைத்திருந்த முழு பிராந்தி பாட்டில் தரையில் விழுந்து உடைந்து கிடந்தது.

இந்த சம்பவத்தால் கடற்கரை சாலையில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News