எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா படத்துடன் போஸ்டர் வெளியிட்ட பா.ஜனதா
- எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.
- புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே’ என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
புதுச்சேரி:
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது இதில் விரிசல் ஏற்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா தனித்தனியே கூட்டணி அமைத்து களம்காண உள்ளன.
இந்த சூழலில் புதுவை பா.ஜனதா லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா படத்துடன் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்திலும் வெளிவந்துள்ளது.
அதில் பிரதமர் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 'தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொண்டனர்' என்றும், 'எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.
அவர் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்'என்றும், 'புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே' என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டரில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, புதுவை பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி., உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் ஆகியோரது படங்களும் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. வாக்குகளை தங்கள்வசம் இழுக்கவே இதுபோன்ற நடவடிக்கையில் புதுச்சேரி பா.ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரின் படங்களை போட்டு தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜனதாவின் இந்த உத்தி, புதுவை அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.