கடன் வாங்கி சென்னை சென்று பட்டம் பெற்றதை நினைவுகூர்ந்த முதலமைச்சர் ரங்கசாமி
- அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
- காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது.
புதுச்சேரி:
காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியின் 5-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
படிப்பில்லாத மாணவர்கள் தீய வழியில் செல்கின்றனர். படிப்பு இருந்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல வழியில் செல்ல முடியும். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுவதால் கல்வியில் புதுவை மாநிலம் சிறந்து விளங்குகின்றது.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பினால் அதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.
காரைக்காலில் ரூ.410 கோடியில் ஜிப்மர் கிளை கல்லூரிரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.460 கோடியில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும். இன்னும் 2 ஆண்டுகளில் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரிக்கு போதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். மாணவர்கள் தொழில்முறை படிப்புகளில் கவனம் செலுத்தி நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது. அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
நான் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த போது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். அங்கு சென்று மேடையில் ஏறி பட்டம் பெற ஷூ, பட்டமளிப்பு கவுன், தொப்பி ஆகியவற்றை வாங்கி பட்டம் பெற்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.