புதுச்சேரி

பழைய காரில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் புதுச்சேரி நகரை வலம் வந்த காட்சி.

புதுப்பிக்கப்பட்ட ராசியான பழைய காரில் கவர்னருடன் புதுச்சேரியில் வலம் வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி

Published On 2024-05-29 04:00 GMT   |   Update On 2024-05-29 04:00 GMT
  • கவர்னரிடம் காருடனான தனது அனுபவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பகிர்ந்து கொண்டார்.
  • கார் செயின்ட் லூயிஸ் சாலை, பட்டேல்சாலை, கடற்கரை சாலை, துய்மா வீதி வழியாக மீண்டும் கவர்னர் மாளிகை வந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 1997-ம் ஆண்டு முதன் முதலில் அம்பாசிடர் கார் வாங்கினார்.

வெள்ளை நிற அம்பாசிடர் காரை 20 ஆண்டுகள் வரை அவர் பயன்படுத்தி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு கார் பழுதானதால் அதை பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்தார். இந்த நிலையில் ராசியான தனது காரை மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்தார்.

இதற்காக காரை தூத்துக்குடிக்கு அனுப்பி சுமார் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பித்தார். புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் கார் புதுச்சேரி கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து உள்ளூர் நிகழ்வுகளில் தனது விருப்பமான பழைய காரையே அவர் பயன்படுத்துகிறார்.

இந்த நிலையில் இதை அறிந்த புதுவை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அந்த காரை பார்க்க விரும்பினார். அதையடுத்து நேற்று மாலை தனது அம்பாசிடர் காரில் ராஜ் நிவாஸ்க்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார். அங்கு சிறிது நேரம் கவர்னருடன் ஆலோசித்த ரங்கசாமி காரை பார்க்க கவர்னரை அழைத்து வந்தார்.

காரை வந்து பார்த்த கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் காரை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். கவர்னரிடம் காருடனான தனது அனுபவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பகிர்ந்து கொண்டார்.

பின்னர் இருவரும் அம்பாசிடர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தனர். கார் செயின்ட் லூயிஸ் சாலை, பட்டேல்சாலை, கடற்கரை சாலை, துய்மா வீதி வழியாக மீண்டும் கவர்னர் மாளிகை வந்தது. அங்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை இறக்கி விட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு காரில் சென்றபோது புதுச்சேரி மாநிலத்தை சிறப்பான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பது பற்றி பேசினோம். எனது மிக ராசியான வண்டியில் பயணம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News