புதுச்சேரி

முகேஷ்- மாணவி கீர்த்தனா


புதுவை அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை- ஒருதலை காதலில் ரவுடி வெறிச்செயல்

Published On 2022-07-20 03:50 GMT   |   Update On 2022-07-20 03:50 GMT
  • கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
  • ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

புதுச்சேரி:

புதுவை திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பேட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது18). இவர் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

இவரை அதே பகுதியை சேர்ந்த உறவினர் முகேஷ் (23) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலை மாணவியிடம் பலமுறை கூறியும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை கீர்த்தனா கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். இதற்காக மதடிகப்பட்டில் இருந்து பஸ் ஏறி சன்னியாசிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கத்திக்குத்தில் மாணவியின் தலை, கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கீர்த்தனா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்த மாணவியின் தம்பி அபினேஷ் தனது நண்பருடன் மொபட்டில் அங்கு வந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது அக்காளை தூக்கி மொபட்டில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

மாணவியை எடுத்து வந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கீர்த்தனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அபினேஷ் கதறி அழுதான்.

மாணவி படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இதற்கிடையே கீர்த்தனா இறந்தது பற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். மாணவியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் ஹரி தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

மாணவி படுகொலை தொடர்பாக திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முகேஷை வலைவீசி தேடி வருகின்றனர். முகேஷ் மீது ஏற்கனவே அடிதடி, திருவண்டார்கோவில் மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் பெயர், போலீசாரால் பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள் சரித்திர பதிவேட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News