மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து ஆரோவில்லில் வெளிநாட்டினர் அமைதி பேரணி
- வெளிநாடு செல்ல விரும்பும் ஆரோவில் வாசிகளை நிர்வாகத்தினர் செல்ல விடாமல் பல்வேறு வழிகளில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
- ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்தும் ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் விசிட்டர் சென்டர் முன்பு திரண்டனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில்.
இங்கு நாடு, மதம், இனம், மொழி, அரசியல் என வேறுபாடின்றி 3 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூமி வடிவிலான மாத்திர் மந்திரியை சுற்றி, அன்னையின் கனவு திட்டமான கிரவுன் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக இடையூறாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. பசுமை நிறைந்த இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ஆரோவில்லில், இரு தரப்பினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆரோவில் நிர்வாகத்தினர், பல்வேறு யூனிட்களில் பணியாற்றி வரும் சிலரை எந்த அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்வதாகவும், நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதே போன்று வெளிநாடு செல்ல விரும்பும் ஆரோவில் வாசிகளை நிர்வாகத்தினர் செல்ல விடாமல் பல்வேறு வழிகளில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை கண்டிக்கும் வகையிலும் ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்தும் ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் விசிட்டர் சென்டர் முன்பு திரண்டனர்.
பின் அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சோலார் கிச்சன் வரை கையில் பதாகைகள் ஏந்தி ஒற்றுமை அமைதி பேரணி சென்றனர். அங்கிருந்து மீண்டும் விசிட்டர் சென்டரை வந்தடைந்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் ஆரோவில் வாசிகள் கலந்து கொண்டனர்.