புதுச்சேரி

அரசு வழங்கிய காரை திரும்ப ஒப்படைத்த சுயேட்சை எம்எல்ஏ

Published On 2024-03-02 04:31 GMT   |   Update On 2024-03-02 04:31 GMT
  • கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார்.
  • மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது.

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22-ந் தேதி இடைக்கால கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அரசு காரில் வந்து இறங்கினர்.

ஆனால் திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் மட்டும் தனது உதவியாளரின் பைக்கில் வந்து கலந்து கொண்டார்.

அரசு கொடுத்த கார் அடிக்கடி பழுதாகி விடுவதால் தனது வீடான செல்லிப்பட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தாக தெரிவித்தார்.

மேலும் தனக்கு புதிய காரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனாலும், அவருக்கு புதிய கார் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் காரை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து கார் சாவியை கொடுத்து காரை ஒப்படைத்தார். கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார். இது குறித்த அங்காளன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-


எனக்கு கொடுக்கப்பட்ட அரசு கார் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அந்த காரை பட்டி பார்த்து புதிய கார் போல் என்னிடம் வழங்கினர்.

ஆனால் கார் எங்கு போனாலும் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது.

இதேபோல் மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது. ஆனால் எனக்கு காருக்கு டீசல் போட பணம் தருவதில்லை. காரின் ஆவணங்களையும் வழங்கவில்லை. இதனால் எனக்கு காரே வேண்டாம் என்று சபாநாயகரை சந்தித்து சாவியுடன் ஒப்படைத்துவிட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News