ஜிப்மர் ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்- அனைத்து துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை
- ஒரு அதிகாரிக்கு சொத்து இல்லை என்றால் இல்லை என்பதை உரிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.
- அசையா சொத்து கணக்கை சமர்பிக்க தவறினால் நிர்வாக ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
புதுச்சேரி:
புதுவையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ஜிப்மரில் உள்ள அனைத்து துறை தலைவர்களுக்கு நிர்வாக அலுவலர் சிவபாலன் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது-
மத்திய குடிமை பணிகள் நடத்தை விதிகள் அடிப்படையில் ஜிப்மரில் பணியாற்றும் ஏ,பி,சி, ஊழியர்கள் கடந்தாண்டு டிசம்பர் 31-ந் தேதியில் அவர்களின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரில் வைத்திருக்கும் அசையா சொத்தின் முழு விவரங்களையும் வருகிற 31-ந்தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
ஒரு அதிகாரிக்கு சொத்து இல்லை என்றால் இல்லை என்பதை உரிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும். அசையா சொத்து கணக்கை சமர்பிக்க தவறினால் நிர்வாக ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.