புதுச்சேரியில் இன்று மாலை ஜே.பி.நட்டா 'ரோடு-ஷோ'
- ‘ரோடு ஷோ ’வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.
- தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வைத்தி லிங்கம் எம்.பி.யும், அ.தி.மு.க. சார்பில் தமிழ் வேந்தனும் போட்டியிடுகின்றனர். இதனால் புதுச்சேரியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தொகுதி வாரியாக வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
அதுபோல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதுபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ந் தேதி பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை 4 மணி அளவில் விமானம் மூலமாக புதுச்சேரிக்கு வருகிறார்.
மாலை 6 மணி அளவில் அண்ணாசிலையில் இருந்து அஜந்தா சிக்னல் வரை 'ரோடு-ஷோ' செல்கிறார். இந்த 'ரோடு ஷோ 'வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.
தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.