கொரோனா காலத்தில் தயாரிக்கப்பட்ட மெத்தனாலை கள்ளச்சாராயத்துடன் கலந்த கொடூரம்- அதிர்ச்சி தகவல்
- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- 3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாத அந்த மெத்தனாலே விஷதன்மையாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சாராய வியாபாரிகளான மரக்காணம் பகுதியை சேர்ந்த அமரன், முத்து, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, ரவி மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த வேலு, சந்திரன், ராஜேஷ், விஜி உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளச்சாராயம் தயாரிக்க புதுவையில் இருந்து மெத்தனால் வாங்கியது தெரியவந்தது.
இது தொடர்பாக புதுவை முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரை சேர்ந்த பர்கத்துல்லா, வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகிய 2 பேரை புதுவை போலீசார் உதவியுடன் விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை வானரகம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வரும் கடலூரை சேர்ந்த கெமிக்கல் என்ஜினீயர் இளையநம்பியிடம் மெத்தனால் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஏழுமலை, பர்க்த்துல்லா, இளையநம்பி ஆகிய 3 பேரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
22 பேர் பலியான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று விசாரணையை தொடங்கினர்.
சம்பவம் நடந்த மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் விசாரணை நடத்தினர்.
ஏழுமலையும், பர்கத்துல்லாவும் சென்னை வானகரம் தொழிற்சாலையில் இருந்து கடந்த 11-ந்தேதி 3 பேரல்களில் 600 லிட்டர் மெத்தனால் வாங்கி வந்தனர். அதனை புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர்.
அந்த மெத்தனாலை மரக்காணம், செங்கல்பட்டு சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளனர்.
அதனுடன் சேர்த்து கொரோனா காலத்தில் தயாரிக்கபட்ட காலாவதியான மெத்தனாலையும் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது பணம் சம்பாதிக்கும் நோக்கில் கள்ளச்சாராயம் தயாரிக்க பர்கத்துல்லாவும், ஏழுமலையும் அதிகமாக மெத்தனாலை வாங்கி வைத்திருந்தனர். அதில் கள்ளச்சாராயம் தயாரித்தது போக மீதமுள்ள மெத்தனாலை பதுக்கி வைத்திருந்தனர்.
அந்த மெத்தனாலை தற்போது புதிதாக வாங்கிய மெத்தனாலுடன் கலந்து மரக்காணம், செங்கல்பட்டில் இருந்து வந்த சாராய வியாபாரிகளுக்கு விற்றுள்ளனர். அதனை அவர்கள் கள்ளச்சாராயத்துடன் கலந்து குடிமகன்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாத அந்த மெத்தனாலே விஷதன்மையாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் தயாரிக்கப்பட்ட மெத்தனாலுடன் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டதால் அதனை வாங்கி குடித்தவர்கள் பலியானதாக புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.