பாராளுமன்ற தேர்தல்- புதுச்சேரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
- வாக்குச்சாடிகளில் வெயிலில் வாக்காளர்கள் நிற்பதை தடுக்க நிழல் பந்தல், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர்.
- சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க பெஞ்சு, நாற்காலி போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.
புதுவை மாநிலத்தில் வாக்குப்பதிவுக்காக 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. புதுவை பிராந்தியத்தில் 739 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 6.30 மணிக்கு வாக்குச்சாவடிகளில் வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. காலை 6.30 மணி முதல் வாக்காளர்கள் தேர்தல் துறை வழங்கிய பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணங்களோடு தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தனர்.
காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில இடங்களில் எந்திர கோளாறு காரணமாக சற்று காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வெளியில் வர காலதாமதம் ஆனது. இதனால் வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதன்பின் வாக்குப்பதிவு வேகமெடுத்தது. புதுச்சேரியில் கோடை வெயில் தகித்து வருவதால் வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காலையிலேயே மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்தனர். இதனால் நகரம் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
வாக்குச்சாடிகளில் வெயிலில் வாக்காளர்கள் நிற்பதை தடுக்க நிழல் பந்தல், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க பெஞ்சு, நாற்காலி போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
காலை 7 மணி முதல் 8 மணிவரை 8 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதன்பின் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியோரை அழைத்துச்செல்ல மாணவ தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அழைத்துச் செல்ல வீல் சேர், சாய்தளம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. முதியோரை காத்திருக்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு சில இடங்களில் எந்திரம் பழுது, கால தாமதத்தில் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கினாலும் பெரியளவில் பாதிப்பு ஏதுமின்றி அமைதியான முறையில் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.