புதுச்சேரி

புதுச்சேரி-கடலூர் எல்லையில் ரோட்டில் டயரை கொளுத்தி பா.ம.க. மறியல்: போலீசாருடன் தள்ளுமுள்ளு-பதற்றம்

Published On 2023-07-27 10:06 GMT   |   Update On 2023-07-27 10:06 GMT
  • போராட்டத்தின் போது தென்னை மரக்கன்று, கரும்பு பயிர், நெற்பயிர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர். மேலும் அங்கு இருந்த பேரி கார்டுகளை போட்டு தடுத்தனர்.

புதுச்சேரி:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தமிழக அரசை கண்டித்து புதுச்சேரி- கடலூர் எல்லையான முள்ளோடை நுழைவு வாயிலில் புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி, துணை அமைப்பாளர் வடிவேலு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது தென்னை மரக்கன்று, கரும்பு பயிர், நெற்பயிர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர். மேலும் அங்கு இருந்த பேரி கார்டுகளை போட்டு தடுத்தனர்.

தகவல் அறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்ததால் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே சிலர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த லாரி டயரை எடுத்து வந்து போராட்டம் நடந்த இடத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி சாலையில் போட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக பா.ம.க.வினர் 28 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News