புதுச்சேரி

புதுவை சட்டசபை 20-ந்தேதி கூடுகிறது: சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு

Published On 2023-09-10 06:19 GMT   |   Update On 2023-09-10 06:19 GMT
  • சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
  • கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 9-ந் தேதி கவர்னர் தமிழிசை உரையுடன் தொடங்கியது.

13-ந்தேதி நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 14 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

சட்டசபையை 6 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி இந்த மாதத்தில் சட்டசபையை கூட்ட வேண்டும். இதற்காக வருகிற 20-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது. இதை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அன்றைய தினம் ஒரு நாள் மட்டுமே சட்டசபை நடைபெறும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் எதிர்கட்சிகள் தரப்பில் பேனர் கலாச்சாரம், சிலிண்டருக்கு மானியம் வழங்காதது, ரேஷன்கடைகளை திறக்காதது, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமரை சந்திக்காதது குறித்து பிரச்சனையை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News