கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்தியா கூட்டணி கட்சியினர்- போலீசாருடன் தள்ளு முள்ளு
- சிலர் கவர்னர் மாளிகை வாசலில் இருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகை வாசலுக்கு சென்றனர்.
- பாதுகாப்பு பணியில் குறைவாவே போலீசார் இருந்தனர். இதனால் போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை செய்ய காரணமான போதைப்பொருளை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் இன்று நடந்தது.
பந்த் போராட்டம் அறிவித்த இந்தியா கூட்டணி கட்சியினர் காலை 10 மணியளவில் ராஜா தியேட்டர் சந்திப்பில் ஒன்று கூடினர். அங்கு புதுவை அரசுக்கு எதிராகவும், முதலமைச்சரும், அமைச்சரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஒரு சிலர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திடீரென இந்தியா கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, திமுக நிர்வாகிகள் கார்த்திகேயன், சண்.சண்முகம், பிரபாகரன், சக்திவேல், தியாகராஜன், கலியகார்த்திகேயன், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம் நேரு வீதியில் ஆக்ரோஷமாக வந்தது. ஊர்வலத்தை நேருவீதி, மிஷன்வீதி சந்திப்பில் பேரிகார்டு அமைத்து போலீசார் தடுத்தனர். இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன் வீதியில் திரும்பினர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அவர்களை தள்ளி விட்டு, ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன்வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.
அங்கு போலீசார் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் குறைவாவே போலீசார் இருந்தனர். இதனால் போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் போலீசார் உட்பட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ஆனாலும் பேரிகார்டுகளை தள்ளிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், திருநங்கைகள் சிலர் கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.
அவர்களை போலீசார் துரத்தி பாரதிதாசன் சிலை அருகே தடுத்து பிடித்தனர். பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கவர்னர் மாளிகை நோக்கி செல்ல விடாமல் தடுக்கும் வகையில் சுற்றி வளைத்தனர். திடீரென மீண்டும் அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஓடினர். சிலர் கவர்னர் மாளிகை வாசலில் இருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகை வாசலுக்கு சென்றனர்.
கவர்னர் மாளிகை வாசலில் நின்று அவர்கள் கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை துரத்திப் பிடித்து கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கவர்னர் மாளிகை வாசல், சுற்றுப்புற பகுதிகளில் களேபரமாக இருந்தது. இதையடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர். வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க., காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 திருநங்கைககளுக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. கைது செய்தோரை போலீசார் வாகனங்களில் ஏற்றி கோரிமேடு கொண்டு சென்றனர்.