புதுவை அரசின் கடன் ரூ.9 ஆயிரத்து 369 கோடி
- கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ.2176 கோடியாக இருந்தது.
- கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை அரசு நிர்வாகம் சுமார் ரூ.1558 கோடி வரை செலுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேசத்தின் 2023-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி நிலவரப்படி ரூ. 9 ஆயிரத்து 369 கோடி கடன் உள்ளது.
மொத்த நிலுவை தொகையில், பெரும்பாலான தொகை வெளிசந்தைக் கடன்கள் மூலம் பெறப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தேதியிட்ட பத்திரங்களை ஏலம் விட்டு மாநில மேம்பாட்டுக்காக திரட்டப்பட்டது.
ஜனவரி 20-ந்தேதி நிலவரப்படி, வெளி சந்தை கடன்கள் மூலம் ரூ. 7 ஆயிரத்து 980 கோடி கடன் நிலுவையில் உள்ளது. சிறுசேமிப்புத் திட்டத்தில் கடன் வாங்கிய தொகை ரூ.594 கோடி, திட்டமில்லாத கடன் ரூ.219 கோடி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் பெற்ற கடன் ரூ. 149 கோடி மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை ஆகியவை உள்ளடக்கம்.
சட்டத்தின் விதிகளின்படி, வரையறுக்கப்பட்ட வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களுடன் கடன் வரம்பு 25 சதவீதத்தை கடக்கக்கூடாது.
நடப்பு நிதியாண்டில், நமது கடன் விகிதம் 24.28 சதவீதம் ஆகும். சட்டப்பேரவை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை 4-வது இடத்தில் உள்ளது.
கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ.2176 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை அரசு நிர்வாகம் சுமார் ரூ.1558 கோடி வரை செலுத்தியுள்ளது. இப்போது இருப்பில் உள்ள ரூ.618 கோடியை மரபுக் கடனாக திருப்பி செலுத்த வேண்டும். இந்த மொத்த நிலுவையில், ரூ.425 கோடி தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெறப்பட்டது.
இருப்பினும், நிலுவையில் உள்ள கடனைக் காட்டும் புள்ளிவிவரங்கள், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கடன் வரம்புகளுக்குள் புதுவை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.