புதுச்சேரி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து சட்டமன்ற தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பு- கவர்னர் தமிழிசை தகவல்

Published On 2023-08-05 06:53 GMT   |   Update On 2023-08-05 06:53 GMT
  • புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இதுவரை சட்டசபையில் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • புதுவை சட்டசபையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

புதுச்சேரி:

யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இதுவரை சட்டசபையில் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வப்போது மாநில அந்தஸ்து விவகாரம் அரசியல் கட்சிகளால் விஸ்வரூபம் எடுக்கும். இதற்காக பந்த், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களும் களை கட்டும். ஆனால் மீண்டும் அடங்கிப் போய்விடும்.

சமீப காலமாக முதலமைச்சர் ரங்கசாமி, அரசுக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் அதிகாரம் இல்லை என்பதை அரசு விழாக்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். புதுவை சட்டசபையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரம் சூடு பிடித்தது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

அதோடு, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தும் வகையில் எம்.எல்.ஏக்களை டெல்லி அழைத்துச் செல்வதாகவும் ரங்கசாமி கூறியிருந்தார்.

இதனிடையே பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. சுப்புராயன், மாநில அந்தஸ்து தீர்மானம் தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி, 2018-க்கு பிறகு மாநில அந்தஸ்து கோரி எந்த தீர்மானமும் மத்திய அரசுக்கு வரவில்லை என்றும், புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்றும் பதிலளித்திருந்தார்.

இதையடுத்து மீண்டும் புதுவையில் மாநில அந்தஸ்து விவகாரம் சூடு பிடித்தது. சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பாதது ஏன்? முடக்கி வைத்துள்ளது யார்? கவர்னர் தமிழிசை தடையாக உள்ளாரா? என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் கவர்னர் தமிழிசை மாநில அந்தஸ்து தீர்மானம் தொடர்பாக ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், மாநில அந்தஸ்து கோரும் சட்டமன்ற தீர்மானம் தனக்கு ஜூலை 22-ந் தேதி விடுமுறை நாளில் கிடைத்தது என்றும், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், இனி மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசை நேரடியாக சந்தித்து எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அரசியல்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினால் மட்டுமே மாநில அந்தஸ்து வழங்குவதை மத்திய அரசு பரிசீலிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

இதனிடையே புதுவைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் அரசு முறை பயணமாக வருகிற திங்கட்கிழமை வருகிறார். அவரிடம் அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News