புதுச்சேரி

புதுச்சேரியில் பேக்கரியை சூறையாடிய கும்பல்- கட்சி அலுவலகம் கட்ட நிதி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்

Published On 2023-08-14 04:16 GMT   |   Update On 2023-08-14 04:37 GMT
  • கட்சி அலுவலகம் கட்டுவதாகவும், அதற்கு பேக்கரி உரிமையாளரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
  • ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி-விழுப்புரம் சாலை, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பேக்கரி உள்ளது.

அந்த கடைக்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த ஊழியர் ஆனந்திடம் தகராறு செய்தது. அடுத்த சில நிமிடத்தில் அந்த கும்பல் ஆனந்தை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி பொருட்களை சூறையாடினர்

உடனே அங்கிருந்த ஊழியர்கள் ஆனந்தை மீட்டனர். பேக்கரிக்குள் 8 பேர் கொண்ட கும்பல் ஊழியரை தாக்கும் சி.சி.டி.வி. வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், கட்சி அலுவலகம் கட்டுவதாகவும், அதற்கு பேக்கரி உரிமையாளரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

பேக்கரி உரிமையாளர் சிமெண்டு வாங்கித் தருவதற்கு காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் உழவர் கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் பேக்கரிக்குள் புகுந்து ஊழியர் ஆனந்தை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், உழவர்கரை ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல், கடை சூறை, அடித்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உழவர்கரையை சேர்ந்த சுப்ரமணி (33) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News