கோவில் விழாவில் வாலிபர் வெட்டி கொலை
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ருத்ரேஷ்(வயது28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை உள்ளது.
பெயிண்டர் வேலை செய்து வந்த ருத்ரேஷ் சமீப காலமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த கவுதம் என்பவரும் கஞ்சா விற்று வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் கஞ்சா விற்பதில் தொழில் போட்டி இருந்து வந்தது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கவுதமனை கத்தியால் ருத்ரேஷ் வெட்டினார். இதில் கவுதமனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் ருத்ரேஷ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
இந்த பால்குட ஊர்வலத்தில் ருத்ரேசின் தாய் மற்றும் சகோதரியும் பங்கேற்றதால் அதனை காண ருத்ரேஷ் கோவில் எதிரே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் கவுதமன் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் வந்தனர். இதனை கண்டதும் ருத்ரேஷ் ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் சுற்றி வளைத்து ருத்ரேசை சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டியது.
இதில் ருத்ரேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இதனை பார்த்ததும் பால்குடம் ஏந்தி வந்த பெண்களும், அங்கிருந்த பொதுமக்களும் அலறி அடித்து ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ருத்ரேசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ருத்ரேஷ் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக பெரியார் நகர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.