புதுவையில் உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை- சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
- உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது.
- சீனாவில் நோய் தொற்று அதிகரிப்பதால் மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புதுச்சேரி:
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. புதுவையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் புதுவையில் நேற்று பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-
புதுவையில் கடந்த நவம்பர் 27-ந் தேதி கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருந்தது. சீனாவில் நோய் தொற்று அதிகரிப்பதால் மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் பொது இடங்களில் முக கவசம் அணிய புதுவை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாய் எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒன்று, இரண்டு என கொரோனா பாதிப்பு இருந்தது.
நேற்று 680 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுவையில் 2, காரைக்காலில் 2,ஏனாமில் ஒருவர் என 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வீடுகளில் 20 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உருமாறிய கொரோனா பாதிப்பு புதுவையில் இல்லை. போதிய தடுப்பூசி உள்ளதால் விடுப்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.