புதுச்சேரி

'பந்த்' போராட்டத்தால் ஓட்டல்கள் அடைப்பு- பசியால் தவித்தவர்களுக்கு உணவு வழங்கிய புதுச்சேரி போலீசார்

Published On 2024-03-09 04:55 GMT   |   Update On 2024-03-09 04:55 GMT
  • புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு அ.தி.மு.க., மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று பந்த் போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்தனர். இதனால் ஓட்டல்கள் மற்றும் சிறிய பெட்டி கடைகள் கூட திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வாசலில் உள்ள உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடுவர். நேற்று பந்த் போராட்டம் காரணமாக அந்த உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.

இதை அறிந்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் இணைந்து உணவு தயாரித்து ஆஸ்பத்திரி எதிரில் உணவுக்காக தவித்த நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

மனித நேயமிக்க போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News