புதுச்சேரியில் மத்திய அரசு நியமிக்கும் அதிகாரிகளால் ரங்கசாமி மன உளைச்சலில் உள்ளார்- தி.மு.க. குற்றச்சாட்டு
- புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது.
- கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருந்தனர்.
புதுச்சேரி:
நர்சுகள் தேர்வில் தற்காலிக நர்சுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல்பாடு குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இதன்பின் எதிர்கட்சித் தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதை நிரப்ப முடியவில்லை. இதற்கு அதிகாரிகள்தான் தடையாக உள்ளனர்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது புதிதாக ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அரசு செயலர், தலைமை செயலர் நர்சுகளை பணி நிரந்தரம் செய்வதை தடுக்கின்றனர்.
முதலமைச்சரிடம் நர்சுகளோடு சென்று கோரிக்கை வைத்தோம். அப்போது முதலமைச்சர், எதையும் செய்ய முடியவில்லை.
தற்காலிக செவிலியர்களுக்கே 3 மாதத்திற்கு ஒரு முறை சம்பளம் வழங்க முடியவில்லை. இவர்களை ஏன் பணியில் வைத்துள்ளீர்கள்? என அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.என மன உளைச்சலை முதலமைச்சர் கொட்டியுள்ளார். அவர் செய்ய நினைத்ததை அவரால் செய்ய முடியவில்லை.
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்த முதலமைச்சர் பின்பக்கமாக போய்விடலாமா? என சொல்லும் அளவுக்கு முதலமைச்சரையும், தேர்வு செய்த அரசையும் மதிக்காமல் தனி அரசு நடத்தி வருகின்றனர். மக்கள் கோரிக்கைகள், சட்டமன்ற அறிப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. செவிலி லயர்களுக்கு ஒரு ஆண்டுக்குகூட பணி வழங்க முடியவில்லை.
முதலமைச்சர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் எதையும் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.
இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், வாக்களித்த மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. புதுவை மக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் இதற்கு நல்ல பதில் கிடைக்கும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் புதுவையில் எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார். எல்லா கோப்புகளிலும் அவர் எடுக்கும் முடிவுப்படிதான் நடக்கிறது. பா.ஜனதா அளித்த வாக்குறுதிப்படி புதுவைக்கு இதுவரை எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.