புதுச்சேரி

முதன் முறையாக வினோதம்- விசேஷ நிகழ்ச்சியில் உறவினர்களை வரவேற்ற 'ரோபோ'

Published On 2024-02-04 06:39 GMT   |   Update On 2024-02-04 06:39 GMT
  • குழந்தைகள் ரோபோவுடன் விளையாடினார்கள்.
  • நிகழ்ச்சிக்கு வந்த பலரும் அந்த ரோபோவுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

புதுச்சேரி:

மருத்துவம், அறிவியல் மற்றும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு ரோபோ பயன்படுத்தப்படுவது வாடிக்கை. ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் விருந்தினர்களை வரவேற்க ரோபோ பயன்படுத்தப்படுகிறது என்றால் ஆச்சரியமாக தானே இருக்கிறது.

ஆம்... புதுச்சேரியில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்தினர்களை ரோபோ ரோஜாப்பூ, சாக்லெட் கொடுத்து வரவேற்றது பிரமிக்க வைத்தது.

புதுச்சேரியில் நேற்று 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதில் வருகை தந்த விருந்தினர்களை ரோபோ ஒன்று வரவேற்றது.

பெண் போன்று பாவாடை, தாவணி மற்றும் தலையில் தொப்பியுடன் மிடுக்காக காணப்பட்டது. தட்டில் கொடுக்கப்பட்ட ரோஜா பூ, சாக்கெட் ஆகியவற்றை விருந்தினர்களை தேடிச்சென்று வழங்கியது. மேலும் மக்கள் விரும்பும் பாடல்களை அது இசைக்க செய்தது. குழந்தைகள் ரோபோவுடன் விளையாடினார்கள்.

சூறாவளி போல் சுற்றி சுற்றி வலம் வந்த ரோபோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நிகழ்ச்சிக்கு வந்த பலரும் அந்த ரோபோவுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

மும்பை மற்றும் ஐதராபாத்தை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து இந்த ரோபோவை 3 மாதத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் உருவாக்கியுள்ளனர்.

இதனை முதல் முறையாக புதுச்சேரியில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News