அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட்... ஜனவரி மாத இறுதியில் இருந்து வழங்கப்படுகிறது
- மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.
- பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 300 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவை அரசு வழங்கியது.
இதற்காக 11 இடங்களில் மத்திய சமையல் கூடங்கள் நிறுவப்பட்டது. இந்த நிலையில் 2018 முதல் அட்சய பாத்திரம் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து நவீன சமையல் கூடத்தில் மதிய உணவு தயாரிக்கப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர காலையில் பால், வாரம் 3 முட்டை வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
கவர்னர் ஒப்புதலை தொடர்ந்து டெண்டர் கோரியுள்ளோம். டெண்டர் பணிகள் முடிய 2 மாதங்களாகும். அதன்பிறகு ஜனவரி மாதம் இறுதியில் குடியரசு தினத்தில் சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம். நாளுக்கு ஒரு தானிய பிஸ்கட் வழங்க திட்டமிட்டுள்ளோம். மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லும் முன்பு அவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட் வழங்கப்படும் என்றார்.