நடுக்கடலில் காரைக்கால் மீனவர்களை தாக்கி மீன்கள் பறிப்பு- இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
- கோடியக்கரை அருகே நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் அங்கு படகில் வந்தனர்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் இலங்கை கடற்கொள்ளையர்கள் காரைக்கால் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தனசீலன். இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றார்.
இவருடன் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணியன், அய்யப்பன், சதீஷ், மணிபாலன், அபினேஷ், மாதேஷ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இவர்கள் கோடியக்கரை அருகே நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் அங்கு படகில் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இலங்கை கடற்கொள்ளையர்கள் காரைக்கால் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
பின்னர் இரும்பு பைப், பட்டாக்கத்தி ஆகியவற்றால் காரைக்கால் மீனவர்கள் 7 பேரையும் கொடூரமாக தாக்கினர். இதனால் அவர்கள் வேதனையால் அலறி துடித்தனர். என்றாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கி விட்டு படகில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள், வலை, செல்போன், திசை காட்டும் கருவி, டார்ச் லைட் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் காரைக்கால் மீனவர்கள் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவசரம் அவசரமாக மீனவர்கள் படகை கரைக்கு ஓட்டி வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஊருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கிராம மக்கள் மீனவர்கள் 7 பேரையும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மீனவர்கள் ஒன்று திரண்டனர். இதன் காரணமாக அங்கு பதட்டம் நிலவியது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக புதுவை மாநில அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என்றனர்.