null
ஆண்டிற்கு 10 நாள் 'நோ பேக் டே': புதுவை பள்ளிகளில் வருகிற 31-ந்தேதி 'புத்தகமில்லா தினம்'
- புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகள் அனைத்து மாதத்தின் கடைசி வேலை நாளை புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும்.
- ஒரு வேளை மாதத்தின் கடைசிநாள் விடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முந்தைய நாள் புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும்.
புதுச்சேரி:
மாணவர்களின் மன அழுத்தம் போக்க புதுவை கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
மாணவர்களின் பாடச்சுமை, மன அழுத்தம் குறைக்க ஆண்டுக்கு 10 நாள் புத்தகமில்லா தினமாக (நோ பேக் டே) கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-ல் கொண்டுவந்த புத்தகப்பை கொள்கையின்படி ஆண்டுக்கு 10 நாள் புத்தகமில்லாத தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.
கலை, வினாடி-வினா, விளையாட்டு, கைவினைகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
எனவே புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகள் அனைத்து மாதத்தின் கடைசி வேலை நாளை புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும். ஒரு வேளை மாதத்தின் கடைசிநாள் விடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முந்தைய நாள் புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும். இந்த தினத்தில் மாணவர்களை புத்தகப்பை கொண்டுவர கட்டாயப்படுத்தக்கூடாது. இதை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.