மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்வதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது- வைத்திலிங்கம் வேதனை
- ஜனநாயகத்தை முழுமையாக அழித்த கட்சி பா.ஜனதா தான்.
- தென்னிந்தியாவை ஆள வேண்டும் என பா.ஜனதாவினர் நினைக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தி.மு.க.- காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் மோசமான பாராளுமன்றத்தை சந்தித்துள்ளேன். மறுபடியும் போக வேண்டும் என்று நினைப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் மோடியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதற்காவே திரும்பவும் போக வேண்டும் என்று நினைக்கின்றேன்.
ஜனநாயகத்தை முழுமையாக அழித்த கட்சி பா.ஜனதா தான். இன்றைய தினம் நாட்டை காக்க வேண்டும் என்றால் பா.ஜனதா இருக்கக்கூடாது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்து விட்டால், மீண்டும் தேர்தல் நடக்குமா என்பதே பெரிய விஷயமாகி விடும்.
சட்டம் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றும் அளவுக்கு அவர்களுக்கு மன தைரியமும், பண தைரியமும் இருக்கிறது. இதனை மாற்ற வேண்டும் என்றால் ஒரு சுதந்திர போராட்டத்தை போன்று போராட வேண்டும்.
தென்னிந்தியாவை ஆள வேண்டும் என பா.ஜனதாவினர் நினைக்கின்றனர். நிச்சயமாக தமிழகம், புதுவை அதனை ஏற்காது. தென்னிந்தியாவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாது.
ஏனென்றால் இங்கு அதிகம் படித்தவர்கள், உழைப்பவர்கள், சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கின்றனர்.
ஆகவே நாம் இந்தியா முழுவதும் துடைத்தெறிய வேண்டிய கட்சியாக பா.ஜனதா உள்ளது. அதனை நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்றார்.
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் தான் மீண்டும் போட்டியிட போகிறார். கட்சி தலைமையும் அவரைத்தான் வேட்பாளராக அறிவிக்கும் என்று உள்ள நிலையில் தொண்டர்கள் அவரை முன்னிறுத்தி தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அவரது இந்தந பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.