புதுச்சேரி
null

புதுச்சேரியில் பெண் வாக்காளர்களை கவர பா.ஜனதா-காங். தீவிரம்

Published On 2024-04-12 08:16 GMT   |   Update On 2024-04-12 08:52 GMT
  • வாக்குப் பதிவிலும் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள்.
  • தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம் உள்ளனர்.

புதுவை தேர்தல் துறையின் இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் இடம் பெற்றுள்ளனர். இதில் மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் பெண் வாக்காளர்கள்தான் அதிகளவில் உள்ளனர்.

புதுவை பிராந்தியத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 28 ஆண்வாக்காளர்களும், 4 லட்சத்து 15 ஆயிரத்து 183 பெண் வாக்காளர்களும் உள்ளனர். காரைக்கால் பிராந்தியத்தில் 76 ஆயிரத்து 932 ஆண் வாக்காளர்களும், 89 ஆயிரத்து 258 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

மாகியில் 14 ஆயிரத்து 357 ஆண், 16 ஆயிரத்து 653 பெண், ஏனாமில் 19 ஆயிரத்து 12 ஆண், 20 ஆயிரத்து 343 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தத்தில் புதுவை மாநிலம் முழுவதும் 4லட்சத்து 79 ஆயிரத்து 329 ஆண், 5 லட்சத்து 41 ஆயிரத்து 431 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அதோடு வாக்குப் பதிவிலும் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள். இதனால் பெண் வாக்காளர்களை கவர, புதுவை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

பா.ஜனதாவினரும், காங்கிரசாரும் பெண்களை அதிகளவில் பிரசாரத்திற்கு அழைத்து செல்கின்றனர். பெண்களும் ஆர்வமாக பிரசாரத்திற்கு சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம், பெண் வாக்காளர்கள், பணத்துக்கு பதிலாக மீண்டும் இலவச அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார்.

அதோடு புதுவை அரசு 64 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கி வருவதாகவும், விடுபட்ட 10 ஆயிரம் பெண்கள் கண்டறியப்பட்டு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும்.என்றும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் என பெண்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பட்டியலிட்டு பேசுகிறார்.

இன்னும் 2 ஆண்டுகள் அரசு தொடரும் என்பதால், மேலும் பல பெண்களுக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளோம். முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என கூறி வருகிறார்.

காங்கிரஸ் தரப்பில் சிறுமி பாலியல் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தி, பெண்களுக்கு புதுவையில் பாதுகாப்பு இல்லை என்று பிரசாரம் செய்கின்றனர். மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம், பெண்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதை எடுத்துகூறி பிரசாரம் செய்கின்றனர்.

அதோடு, பெண்கள் வீட்டு வேலை, குடும்ப பணி செய்தாலும் மதிப்பு, மரியாதை இல்லை. இதனால்தான் ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் கொடுக்கப்படும் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார். அவர் சொன்னதை செய்வார் என குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் பெண் வாக்காளர்களை கவர 2 கூட்டணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

Tags:    

Similar News