புதுச்சேரி

தேர்தல் பணிக்கு வராமல் ஒதுங்கிய காங். நிர்வாகிகள் மீது நடவடிக்கை- பா.ஜ.கவிற்கு ஆதரவளித்ததாக குற்றச்சாட்டு

Published On 2024-04-21 07:31 GMT   |   Update On 2024-04-21 07:31 GMT
  • ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில் ரீதியாக பலன் பெற்றுள்ளனர்.
  • ஓட்டுப் பதிவு முடிந்து விட்ட நிலையில் ‘கருப்பு ஆடுகள்’ மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி:

நடந்து முடிந்த புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கும், பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்திற்கும் நேருக்கு நேராக கடும் போட்டி நிலவியது.

பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம், புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவராக பொறுப்பு வகித்தவர். மேலும் அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். இதனால் 30 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அவருக்கு பரிச்சயமானவர்களாக உள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில் ரீதியாக பலன் பெற்றுள்ளனர். இதனால் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

'நீங்கள் பா.ஜனதாவுக்கு நேரடியாக ஓட்டு சேகரிக்க வேண்டாம். ஆனால் காங்கிரஸ் பிரசாரத்துக்கு செல்லாமல் ஒதுங்கி இருந் தால்போதும் என நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடல்நிலை சரியில்லை என கூறி பிரசாரத்தில் பங்கேற்காமல் 'எஸ்கேப்' ஆகிவிட்டனர். இதுதவிர வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் வேகம் காட்டவில்லை.

இதுகுறித்த தகவல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடைத்துள்ளது. அதிர்ச்சி அடைந்துள்ள அவர்கள், ஓட்டுப் பதிவு முடிந்து விட்ட நிலையில் 'கருப்பு ஆடுகள்' மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்த காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News