புதுச்சேரி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மின்னல் வேக நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

Published On 2024-04-15 06:11 GMT   |   Update On 2024-04-15 06:11 GMT
  • வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி புதுவை மாநில விலங்கான அணில் வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
  • வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி தேர்தல் துறை 100 சதவீதம் வாக்குபதிவு மற்றும் நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது .

ஆடல்-பாடல் இதில் ஒரு பகுதியாக புதுச்சேரி காந்தி திடல், ரெயில் நிலையம், அண்ணாசாலை மற்றும் கார்கில் நினைவிடம் உட்பட 7 இடங்களில் பாடலுடன் நடன குழு மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி புதுவை மாநில விலங்கான அணில் வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்ட மாநில அதிகாரி டாக்டர் கோவிந்தசாமி, நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி சதீஷ்குமார் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாய கல்லூரி மாணவ- மாணவிகள், ஆங்கிலத்தில் பிளாஷ் மாப் என்றழைக்கப்படும் மின்னல் நடனம் கடற்கரை சாலை தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்றது.


30 மாணவ- மாணவிகள் ஆடிய மின்னல் நடனத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். சமுதாய கல்லூரியின் முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன், வாக்காளர் கல்வி முதன்மை அதிகாரி லதா பார்த்திபன் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். உடற்பயிற்சி கல்வி இயக்குனர் ஜெகதீஸ்வரியின் மேற்பார்வையில் நடனம் அமைக்கப்பட்டிருந்தது. வாக்காளர் கல்வி கருத்துக்கள் அடங்கிய பாடல், வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திய வண்ணம் பாடல் முடிந்தது.

வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

புதுவை அரசு ஆயுஷ் மருத்துவ துறையுடன் இணைந்து வெங்கட்டா நகர் பூங்காவில், நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்களுக்கு, நல்ல உடல் வளம் அமைய உதவும் யோகாப் பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது.

அத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு கருத்துக்களும் சொல்லப்பட்டு, விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

ஆயுஷ் மருத்துவத் துறையின், யோகா மற்றும் இயற்கை சிகிச்சை பிரிவின் டாக்டர் வெங்கடேஸ்வரன் யோகாவின் சிறப்புக்களை எடுத்துரைத்தார். காலை நடைபயிற்சி செய்திட வந்த பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு சந்தேகங்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 

Tags:    

Similar News