புதுச்சேரி

அலைச்சறுக்கு போட்டியில் அசத்திய வீரர்கள்.

புதுச்சேரி கடலில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் அசத்திய வீரர்கள்: சுற்றுலா பயணிகள் வியந்து பார்த்தனர்

Published On 2023-07-30 05:23 GMT   |   Update On 2023-07-30 05:23 GMT
  • 9 அடி நீளம் கொண்ட தக்கையை காலில் இணைத்து கொண்டு விளையாடினர்.
  • போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து மாமல்லபுரம், கோவளம் ஆகிய இடங்களில் நடைபெறும் அலை சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான அலைச் சறுக்குப்போட்டி தொடக்க விழா புதுவை தலைமை செயலம் எதிரில் நேற்று நடைபெற்றது.

இதில் புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் கடலோர மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் 80 பேர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தக்கை பலகையின் (சர்ப்போர்ட்) மீது வீரர்கள் நின்று கொண்டு சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து சென்று அசத்தினர். 9 அடி நீளம் கொண்ட தக்கையை காலில் இணைத்து கொண்டு விளையாடினர்.

சீறும் அலைகளில் அதிக நேரம் பயணித்து சாகசம் செய்த வீரர், வீராங்கனைகள் புள்ளிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெளிநாடுகளில் நடப்பது போன்று புதுச்சேரி கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் வீரர், வீராங்கனைகளின் சாகசங்களை கடற்கரைக்கு வந்த உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு வியந்தனர்.

இதன் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து மாமல்லபுரம், கோவளம் ஆகிய இடங்களில் நடைபெறும் அலை சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

ஒட்டு மொத்தமாக நடக்கும் போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் சிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் நடை பெறும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

Tags:    

Similar News