புதுச்சேரி

மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த காட்சி.

புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் 'திடீர்' மோதல்: போலீசார் தடியடி

Published On 2023-09-23 06:43 GMT   |   Update On 2023-09-23 06:43 GMT
  • காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
  • இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் சதுர்த்தி பேரவை சார்பில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக (விஜர்சனம்) நேற்று மாலை புதுவை சாரம் அவ்வை திடலிருந்து புதுவை கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையும், மதுரை வீரன் கோவில் தெருவில் வைக்கப்பட்டு இருந்த சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிலையின் முன்பு விஷ்வா ஆதித்யா (வயது 21), அருண், சஞ்சய், அய்யனார் உள்பட பலர் நடந்து சென்றனர்.

அதுபோல் மதுரை வீரன் கோவில் தெரு விநாயகர் சிலையின் முன்பு அதே பகுதியை சேர்ந்த அசோக் (21), வசந்த் (23), சூர்யா (16) மற்றும் சிலர் சென்றனர்.

காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர்.

இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த விஷ்வா ஆதித்யா, அருண், சஞ்சய், அய்யனார், அசோக், வசந்த், சூர்யா ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க புதுவை கடற்கரை சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். 

Tags:    

Similar News