காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் உறவினர் வீடுகளில் நடந்த சோதனையில் பணம் சிக்கியதா?
- காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
- சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் துறையினர் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுவை இளங்கோ நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் வந்தனர். அவர்கள் அந்த வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.
சோதனையின் இடையே அவ்வப்போது அதிகாரிகள் வெளியே வருவதும் மீண்டும் வீட்டிற்குள் செல்வதுமாக இருந்தனர். இந்த சோதனை இரவு 8 மணிவரை நீடித்தது. சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.
அதில் சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றதாக தெரிகிறது. பணம் எதையும் பறிமுதல் செய்து சென்றார்களா? என்பது தெரியவில்லை.
இதற்கிடையே கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிபாக்கத்தில் உள்ள வைத்திலிங்கம் எம்.பி.சம்பந்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த வருமானவரி சோதனை நடந்தபோது காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் காரைக்காலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். வருமானவரி சோதனை குறித்து அவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பா.ஜனதா வேட்பாளரான புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரின் உறவினர் வீடு, பா.ஜனதா வேட்பாளர் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.