புதுச்சேரி

புதுவை அருகே சாராயக்கடையை சூறையாடிய பெண்கள்- பொருட்களை அடித்து நொறுக்கினர்

Published On 2023-01-23 04:05 GMT   |   Update On 2023-01-23 04:05 GMT
  • சாராயக்கடையில் வேலை செய்யும் இளைஞர்கள் சிலர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
  • சாராயம் குடிக்க வருபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே சாராயக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிபாளையத்தில் சாராயக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் ஏற்பாட்டின்பேரில் அமாவாசையை முன்னிட்டு அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் உள்ளூர் இளைஞர்கள் சிலர் அன்னதானம் சாப்பிட சென்றனர். அப்போது அங்கு உணவு தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கு இருந்த பெரியவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சாராயக்கடையில் வேலைசெய்யும் இளைஞர்களுக்கும், உள்ளூர் இளைஞர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சாராயக்கடையில் வேலை செய்யும் இளைஞர்கள் சிலர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த லிங்காரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள சாராயக்கடை அருகில் ஒன்று திரண்டனர். அவர்கள் திடீரென்று சாராயக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலி, மேஜை, கண்காணிப்பு கேமரா, சாராய கேன்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

அப்போது அங்கு சாராயம் குடித்துக்கொண்டு இருந்தவர்கள் இதனை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சாராயக்கடையை இங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் ஆறுமுகம், காட்டேரிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சாராயம் குடிக்க வருபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே சாராயக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதன் பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். சாராயக்கடையை பெண்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News