என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆஸ்திரேலியா
- டாலர் குறியீடு தெரிந்ததே தவிர அது எந்த நாட்டுடையது என்பது குறிப்பிடப்படவில்லை
- தனது தவறை ஒப்பு கொண்ட நிறுவனம் நஷ்ட ஈடு தர சம்மதித்தது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சான் பிரான்சிஸ்கோ நகரை மையமாக கொண்டு இயங்கும் வாடகை விடுதிகள் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதள நிறுவனம், ஏர்பிஎன்பி (Airbnb).
2008ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், உலகெங்கும் வீடுகள், அபார்ட்மென்ட்கள், மற்றும் பயணியர் விடுதிகளை தங்குவதற்காக தேடும் பயனர்களுக்கு அவை குறித்த தகவல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. தங்கள் இடங்களை வாடகைக்கு விட விரும்புபவர்கள் ஏர்பிஎன்பியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில நாட்களுக்கு தங்க விரும்புபவர்கள் ஏர்பிஎன்பி (Airbnb) மூலம் அந்த இடங்களை முன்பதிவு செய்து உபயோகிக்க முடியும்.
ஆஸ்திரேலியாவிலும் இந்நிறுவனத்தில் இணையதள வழியாக பதிவு செய்து தங்கள் இடங்களை வாடகைக்கு விடுகிறார்கள். அவற்றை பயன்படுத்த டாலர்களில் ஏர்பிஎன்பி கட்டணம் வசூலித்து வந்தது.
ஒரு சில இடங்கள் குறித்த வாடகை கட்டணம் பயனாளிகளுக்கு டாலர் முறையில் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்நிறுவன இணையதளத்தில் டாலருக்கான குறியீடு தெரிந்ததே தவிர அது ஆஸ்திரேலிய டாலரா அல்லது அமெரிக்க டாலரா என்பதை குறிப்பிடவில்லை.
இதனால், மதிப்பில் குறைந்த ஆஸ்திரேலிய டாலரில் கட்டணம் இருக்கும் என பதிவு செய்த பல பயனாளிகள் அதிக மதிப்புடைய அமெரிக்க டாலரில் கட்டணம் செலுத்தும்படி ஆனது.
இதையடுத்து, ஏர்பிஎன்பி நிறுவனத்தின் மீது ஆஸ்திரேலிய மத்திய நீதிமன்றத்தில், நுகர்வோர்களுக்கான அரசாங்கத்தின் "ஆஸ்திரேலிய வர்த்தக போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்" வழக்கு தொடுத்தது. தங்கள் தரப்பில் தவறு நடந்திருப்பதை அந்நிறுவனம் ஒத்து கொண்டது.
2018 ஜனவரி மாதத்திலிருந்து 2021 ஆகஸ்ட் மாதம் வரையான காலகட்டத்தில் சுமார் 63,000 வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் தந்து அதிக கட்டணம் வசூலித்ததற்காக நீதிமன்றம் 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. தனது தவறை ஒத்து கொண்ட ஏர்பிஎன்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தரவும் சம்மதித்துள்ளது.
தற்போது 1 அமெரிக்க டாலர் இந்திய ரூபாயில் 83 எனவும், 1 ஆஸ்திரேலிய டாலர் இந்திய ரூபாயில் 56 எனவும் மதிப்பிடப்பட்டு உலகளவில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
- அதிக மக்கள் குடியேறுவதால் உள்கட்டமைப்பு சிக்கல்கள் அதிகரித்தன
- 2025 ஜூன் மாதத்திற்குள் தற்போது உள்ள அனுமதி பாதியாக குறைக்கப்படும்
ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைகழகங்களில் கல்வி பயிலவும், அங்கேயே தங்கி பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றவும் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் காலம் காலமாக அங்கு செல்வது வழக்கம்.
சமீப காலங்களில் அங்கு செல்ல விரும்பி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிதாகியது. மேலும் இதனால் பல உள்கட்டமைப்பு சிக்கல்களும் எழுந்தன. இது அந்நாட்டு குடிமக்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் க்ளேர் ஓ நெய்ல் (Clare O'Neil) புதிய குடியேற்ற சட்டதிட்டங்கள் குறித்து அறிவித்தார்.
"கடந்த ஜூன் 2023 வருட கணக்கின்படி 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர். பழைய குடியேற்ற சட்ட விதிகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. அவை தேவையற்று காலதாமதம் ஏற்படும் வகையிலும், போதுமான பலன் அளிக்காத வகையிலும் இருந்தது. எனவே, ஒரு பெரும் மாற்றம் தேவைப்பட்டது. ஆஸ்திரேலியாவிற்குள் குடியேறுவோர் எண்ணிக்கை இனி படிப்படியாக குறைக்கப்பட்டு 2025 ஜூன் மாதத்திலிருந்து தற்போது உள்ள அனுமதி 50 சதவீதத்திற்கும் குறைவாக மாற்றப்படும். சர்வதேச மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவிற்குள் கல்வி பயில்வதற்காக நடத்தப்படும் பிடிஈ (PTE) தேர்வில் ஆங்கில புலமைக்கான தேர்வு இன்னும் கடினமாக்கப்படும். ஒரு முறை அங்கு கல்வி பயின்றவர்கள் இரண்டாம் முறை கல்விக்காக அனுமதி கோரும் போது பரிசீலனைகள் கடுமையாக்கப்படும்" என க்ளேர் தெரிவித்தார்.
தற்போதைய தரவுகளின்படி சர்வதேச மாணவர்கள் சுமார் 6 லட்சத்திற்கும் மேல் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடியவர் ஹேடன்
- வெள்ளை நிற மாடலை ஹேடன் விரும்பி தேர்வு செய்துள்ளார்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் (Matthew Hayden).
தொடக்க வீரராக களம் இறங்கி ரன் குவிப்பில் பல சாதனைகளை புரிந்த ஹேடன், சுமார் 15 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரராக திகழ்ந்தார்.
2003 ஐசிசி ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியாவுடனான இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடி அந்த அணி வெற்றி பெற வழி தேடி தந்தவர்களில் ஹேடனும் ஒருவர்.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா ஆட்டோ. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் இவர்களுக்கு கிளைகள் உள்ளன.
கடந்த 2015ல் மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான ஆஸ்திரேலிய தூதராக மேத்யூ ஹேடன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்நிறுவனத்தின் பல கார்களை இணையதள வழியாக ஹேடன் விளம்பரப்படுத்தி வருகிறார்.
சில தினங்களுக்கு முன் ஹேடன், மஹிந்திரா நிறுவன தயாரிப்பான ஸ்கார்பியோ என் (Scorpio N) கார் ஒன்றை வாங்கினார். "எவரெஸ்ட் வைட்" (Everest White) எனும் வெள்ளை நிற ஸ்கார்பியோ மாடலை அவர் தேர்வு செய்துள்ளார். இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனையில் உள்ளது.
இது குறித்து ஹேடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோவில் ஸ்கார்பியோவின் பல அம்சங்களை ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன் புகழ்ந்து பேசுகிறார்.
பயணிகளுக்கான கார்களில் எஸ்.யூ.வி. (SUV) எனப்படும் வாகன வகையை சேர்ந்த ஸ்கார்பியோ காரை நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்த உள்ளதாக ஹேடன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் "ஸ்கார்பியோ என்" மாடல்களில் டீஸல் எஞ்சின் பொருத்தப்பட்டவை மட்டுமே விற்கப்படுகின்றன.
ஹேடன் தேர்வு செய்துள்ள "ஸ்கார்பியோ என்", கடந்த ஜூலை மாதம், ஆஸ்திரேலியாவின் சிம்ப்சன் பாலைவனத்தை (Simpson Desert) அதிவேகமாக கடந்ததற்காக கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில், மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஸ்கார்பியோ கார்தான் அதிக விற்பனையை குவிக்கும் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
- 11 வயதில் ஈடுபட ஆரம்பித்த லாரா, 2009ல் சாம்பியன் பட்டம் வென்றார்
- லாரா 2022 ஜனவரி மாதம் ஹவாய் தீவில் இந்த சாதனையை நிகழ்த்தினார்
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் 31 வயதான லாரா எனெவெர் (Laura Enever).
மேற்கத்திய நாடுகளில் பிரபலமான, பலகையில் நின்று கொண்டு கடல் அலைகளின் மீது நீந்தி விளையாடும் "சர்ஃபிங்" (Surfing) விளையாட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டவர் லாரா.
11 வயதான போது சர்ஃபிங் விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்த லாரா, 2009ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இரண்டு வருடங்கள் கழித்து உலக சர்ஃபிங் சேம்பியன்ஷிப் (World Surfing Championship) சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். வழக்கமான உயரத்தை விட மிக உயரமான அலைகளின் வழியாக சர்ஃபிங் செய்யும் நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டார், லாரா.
இவர் கடந்த 2022 ஜனவரி மாதம் ஹவாய் தீவில் 43.6 அடி உயர அலையை சர்ஃபிங் மூலம் நீந்தி கடந்தார். கின்னஸ் உலக சாதனை பதிவு (Guinness World Records) நிறுவனம் மற்றும் உலக சர்ஃபிங் லீக் (World Surfing League) ஆகியவை இதனை உறுதி செய்துள்ளன.
இந்த தகவல் வெளியானதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த லாரா இது குறித்து தெரிவித்ததாவது:
அந்த அலையை நீந்தி கடக்கும் போது அதுதான் நான் இதுவரை எதிர்கொண்டதிலேயே மிக பெரிய அலை என்பதை உணர்ந்திருந்தேன். ஆனால் பல மாதங்கள் கடந்து வரும் இந்த உலக சாதனை அறிவிப்பு நான் எதிர்பாராதது. இது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனக்கு முன்னர் இந்த விளையாட்டில் ஈடுபட்ட பலருக்கும் எனது நன்றி. அவர்களால்தான் எனக்கு சர்ஃபிங்கில் ஆர்வம் ஏற்பட்டது. அவர்கள் மறைமுகமாக என்னை ஊக்குவித்தவர்கள்.
இவ்வாறு லாரா கூறினார்.
2016 ஜனவரி மாதம் பிரேசில்-அமெரிக்கரான ஆண்ட்ரியா மோல்லர், 42 அடி உயர அலையை நீந்தி கடந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2100 வருடத்திற்குள் 95 சதவீத டுவாலு நீருக்கடியில் சென்று விடும்
- டுவாலு நாட்டிற்கு ஆஸ்திரேலியா ராணுவ பாதுகாப்பு அளிக்கும்
பசிபிக் கடற்பகுதியில் உள்ளது டுவாலு (Tuvalu) எனும் பவழப்பாறைகள் நிரம்பிய சிறு தீவுகளை உள்ளடக்கிய நாடு. இங்கு சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
அதிகரிக்கும் உலக வெப்பமயமாதல், டுவாலுவுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. உயரமான அலைகளாலும், கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதாலும் அங்கு வாழும் மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறி வந்தது.
தலைநகரமான ஃபுனாஃபுயுட்டி (Funafuti) பகுதி, 50 சதவீதம் விரைவில் நீரில் மூழ்கி விடும் என்றும் 2100 வருடத்திற்குள் 95 சதவீத நாடு நீருக்கடியில் சென்று விடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது டுவாலு கடல் மட்டத்தை விட 15 அடி உயரத்தில் மட்டுமே இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதும் நின்று விட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) டுவாலு மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் புகலிடம் அளிக்கும் ஒப்பந்தம் ஒன்றை டுவாலு பிரதமர் காசியா நாடானோ (Kausea Natano) உடன் கையெழுத்திட்டுள்ளார். மேலும், டுவாலு நாட்டிற்கு ராணுவ பாதுகாப்பையும் ஆஸ்திரேலியா அளிக்க ஒப்பு கொண்டுள்ளது.
ஆண்டுதோறும் டுவாலு நாட்டு குடிமக்கள் 300 பேருக்கு ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து, வேலை செய்ய அனுமதி அளிக்கும் விசா வழங்கப்பட உள்ளது.
ஃபலேபிலி சங்கமம் (Falepili Union) என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், பசிபிக் கடற்பகுதி நாடுகளுடன் ஆஸ்திரேலியா செய்து கொள்ளும் ஒரு முக்கிய ஒப்பந்தமாகும்.
- அதிவேகமாக வந்த கார் உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் மீது மோதல்.
- 68 வயதான டிரைவர் மதுபோதையில் காரை ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு. நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது.
இந்த ஹோட்டலில் சலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடம் உள்ளது. நேற்று மாலை இந்தப் பகுதியில ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது திடீரென வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார், இந்த பகுதிக்குள் புகுந்தது. இதில் ஒரு பையன், இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்போது, காரை ஓட்டிவந்தது 68 வயது நபர் எனத் தெரியவந்துள்ளது. அவர் மது அருந்தி கார் ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் எடுத்துக் கொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாகன போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரை வேகமாக ஓட்டி வந்ததுதான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
- நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை இத்தொடர் நடைபெறுகிறது.
சிட்னி:
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும், ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை இத்தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் மேத்யூ வேட் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
மேத்யூ வேட் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா உள்ளிட்ட 15 பேர் கொண்ட பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
- ஆஸ்திரேலியாவை சேர்ந்த தீவு மாநிலம் டஸ்மேனியா
- இப்பகுதிக்கு "உலகின் முனை" எனும் மற்றொரு பெயரும் உள்ளது
சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள்.
வளங்களை குவித்து முன்னேற துடிப்பதால், பல்வேறு காரணங்களால் மனிதர்கள் இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பது அரிதாகி வருகிறது. தூய்மையான காற்றுள்ள இடங்களை தேடி அலையும் மனிதர்களுக்கு உலகில் சில இடங்களே மிஞ்சியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த தீவு மாநிலம், டஸ்மேனியா. இம்மாநிலத்தின் வடமேற்கு முனையில் உள்ள தீபகற்ப பகுதி, கேப் க்ரிம். இது "உலகின் முனை" (Edge of World) எனவும் அழைக்கப்படுகிறது.
அன்டார்டிகாவிலிருந்து எவ்விதத்திலும் அசுத்தமாகாத வேகமான காற்று, மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இங்கு வந்து சேருகிறது. உலகின் பிற பகுதிகளிலிருந்து தொலைதூரம் இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் அறவே செல்லாத இடமென்பதாலும், பனிமலைகள் நிறைந்த தெற்கு கடற்பகுதியின் மீது பயணித்து வரும் காற்று இங்கு வந்தடைவதாலும், இங்குள்ள காற்று உலகிலேயே தூய்மையானது என காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர். ஆன் ஸ்டேவர்ட் தெரிவித்துள்ளார்.
இதே போன்று உலகெங்கிலும் உள்ள பிற சுத்தமான காற்று உள்ள தளங்கள், அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள தீவு மாநிலமான ஹவாயில் உள்ள மௌனா லோவா, பசிபிக் கடற்பகுதியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்குவாரி தீவு, அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் மற்றும் நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் பகுதியில் ஸ்பிட்ஸ்பர்கன் தீவில் உள்ள நை-அலெசுண்ட் ஆகியவையாகும்.
சுத்தமான காற்று உடலாரோக்கியத்திற்கு அவசியமானது என்பதால் இத்தீவிலிருந்து கொள்முதல் செய்த காற்று என் விளம்பரம் செய்து "டஸ்மேனிய காற்று" என பெயரிட்டு பாட்டில்களில் இக்காற்றினை அடைத்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
- ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின.
சிட்னி:
ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி ஜி20 உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த உச்சி மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின.
இந்த ஜி20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது,குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக ஜி20 கூட்டத்தை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிப்பது குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.
- ஏழு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்
- ஆடம் ஜம்பா, அகர் ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக இடம் பிடிப்பு
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வருகின்றன. நேற்று இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது.
கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுகிறார். ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் (ஆல்ரவுண்டர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆல்ரவுண்டர்), மிட்செல் ஸ்டார்க், கேமரூன் க்ரீன் (ஆல்ரவுண்டர்), சீன் அப்போட் ஆகிய ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன் உடன் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஆடம் ஜம்பா, ஆஷ்டோன் அகர் ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். கிளென் மேக்ஸ்வெல் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக செயல்படுவார்.
ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கம்மின்ஸ், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. ஆலேக்ஸ் கேரி, 4. ஜோஸ் இங்கிலிஸ், 5. சீன் அப்போட், 6. ஆஸ்டோன் அகர், 7. கேமரூன் க்ரீன், 8. ஜோஷ் ஹேசில்வுட், 9. டிராவிஸ் ஹெட், 10. மிட்செல் மார்ஷ், 11. மேக்ஸ்வெல், 12. மார்கஸ் ஸ்டோய்னிஸ், 13. டேவிட் வார்னர், 14. ஆடம் ஜம்பா, 15. மிட்செல் ஸ்டார்க்.
- மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது மேவின் ரியல் எஸ்டேட் எனும் நிறுவனம்
- அழகான ஆஸ்திரேலியாவை இந்தியாவை போன்று சுகாதாரமற்று மாற்றி விடாதீர்கள்
ஆஸ்திரேலியாவில் பணிபுரிய தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்லும் இந்தியர்களுக்கு வாடகைக்கு நல்ல வசிப்பிடங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.
இதனால் இவர்களுக்கு உதவுவதற்கு ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன. இவை அந்நாட்டு சட்டதிட்டங்களின்படி உரிமம் பெற்று இயங்க வேண்டும்.
அவற்றில் ஒன்று, மேற்கு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பார்க் பகுதியில் உள்ளது மேவின் ரியல் எஸ்டேட் எனும் நிறுவனம். இதன் இயக்குனர் ப்ரான்வின் பாலிட் எனும் பெண்மணி.
சில வருடங்களுக்கு முன், இவர் மூலமாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியவர் இந்தியாவை சேர்ந்த சந்தீப் குமார். அப்போது இவரது முன்பணத்தில் இருந்து சுத்தம் மற்றும் சுகாதார செலவுக்கான கட்டணங்கள் என குறிப்பிட்டு ஒரு தொகையை ப்ரான்வின் பிடித்தம் செய்திருந்தார். இதற்கு சந்தீப் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருவருக்கும் இது குறித்து மின்னஞ்சல் தொடர்பில் சச்சரவு தொடங்கியிருந்தது. 2021-இல் இது குறித்த வாக்குவாதத்தில் ப்ரான்வின், சந்தீப்பை இனரீதியாக விமர்சித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.
அதில் ப்ரான்வின் கூறியிருந்ததாவது, "நான் ஒரு வெள்ளை இன ஆஸ்திரேலிய பெண். உங்களை போலுள்ள பல இந்தியர்களும் நாங்கள் அனுபவிக்கும் தரமான ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையை அனுபவிக்கவே இங்கு வருகிறீர்கள். குறைவான மக்கள்தொகை, சுத்தமான காற்று, நல்ல சம்பளத்துடன் வேலை மட்டுமின்றி ஒரு வேளை வேலையில்லை என்றாலும் சமூக பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு போன்றவை இங்கு உங்களுக்கு கிடைக்கிறது."
"கூட்டம் கூட்டமாக வரும் உங்கள் இந்தியர்களின் வருகையால் அழகான எங்கள் நாடு, உங்கள் இந்தியாவை போலவே நாடெங்கிலும் சாலைகளில் பிணங்கள், நதிகளில் பாதி எரிந்த பிணங்கள், சேரிகளில் வாழும் மக்கள், ஒருவர் மீது ஒருவர் ஏறி கும்பலில் சண்டையிட்டு பெறும் தரமற்ற மருத்துவ உதவி ஆகியவை அடங்கிய நாடாக மாற்றி விட மாட்டீர்கள் என நம்புகிறேன். நீங்கள் வீடு மாறி செல்லும் போது விட்டு செல்லும் நிலையை சுத்தம் செய்வது அவசியம். அதிலிருந்துதான் அனைத்தும் தொடங்குகிறது," என்று இந்திய நாட்டையும், வாழ்க்கை முறையையும் விமர்சித்தார்.
இந்த மின்னஞ்சலை கண்ட சந்தீப் குமார், மேற்கு ஆஸ்திரேலியாவின் நிர்வாக தீர்ப்பாயத்திடம் இதை சமர்ப்பித்து புகார் அளித்தார். தனது தரப்பில், கோவிட் தொற்றுக்கான காலகட்டத்தில் தான் மிகவும் மனஅழுத்தத்தில் இருந்ததாக தீர்ப்பாயம் முன் ப்ரான்வின் கூறியிருந்தார்.
ப்ரான்வில் வேறொரு மின்னஞ்சலில், "நான் இனவெறியுடன் பேசவில்லை. அவ்வாறு தோன்றினால் என்னை மன்னியுங்கள்" எனவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புகாரை முழுவதும் விசாரித்த தீர்ப்பாயம், செப்டம்பர் 1-இல் இருந்து 8 மாதங்களுக்கு ப்ரான்வின்னுக்கு அளிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக உத்தரவிட்டது.
- ஆஸ்திரேலிய அரசியலமைப்பு சட்டத்தில் அவர்கள் குறித்து சிறு குறிப்பு கூட கிடையாது
- வாய்ஸ் டு பார்லிமென்ட் எனப்படும் ஒரு கமிட்டி அமைக்கப்படும்
அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அந்நாட்டிலேயே காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களுக்கு அந்நாடுகளில் பிற்காலத்தில் குடியேறி தற்போது வரை குடிமக்களாக வாழும் மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் கிட்டத்தட்ட சரிசமமாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆஸ்திரேலியாவில் மட்டும், அங்குள்ள 2.5 கோடி (26 மில்லியன்) மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.2% பழங்குடி மக்கள் வசித்து வந்தாலும் அவர்களுக்கு பின் அங்கு குடியேறியவர்களுக்கு உள்ள உரிமைகள் இல்லாததால், பழங்குடியினரின் சமூக, பொருளாதார வாழ்வியல் மிகவும் பின்னடைந்துள்ளது.
வடக்கு ஆஸ்திரேலியாவிற்கும், நியூ கினியாவிற்கும் இடையில் உள்ள டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளில் வாழ்பவர்களுக்கும், ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழியாக வாழ்வதாக கூறப்படும் பழங்குடியினர்களான ஆஸ்திரேலிய அபோரிஜின்ஸ் மக்களுக்கும், ஆஸ்திரேலியாவில் சட்டமியற்றுதலில் பங்கேற்கும் உரிமைகள் தற்போது வரை கிடையாது.
ஆஸ்திரேலியா ஒரு தனி நாடாக உருவானதும், அங்கு வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில் ஆஸ்திரேலிய கண்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்வதாக நம்பப்படும் அபோரிஜின்ஸ் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகளை குறித்து எவ்வித குறிப்பும் கிடையாது என்பது கசப்பான உண்மை.
இதனை மாற்ற தீவிர முயற்சிகளை கடந்த ஜூன் மாதம் முதல் எடுத்து வரும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், வரும் அக்டோபர் 14-ஐ அன்று இதனை மாற்ற ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
"நெருங்கும் அக்டோபர் 14 தான் நம்முடைய நேரம். அபோரிஜின்ஸ் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு பழங்குடியினருக்கும் இது ஒரு மராத்தான் ஓட்டப்பந்தயம் போன்று நீண்டகால போராட்டமாக இருந்தது. நமக்கு இது ஒரு குறுகிய கால ஸ்ப்ரின்ட் ஓட்டம்" என அல்பானீஸ் தெரிவித்தார்.
இம்முயற்சி வெற்றி பெற்றால், உள்நாட்டு மக்களுக்கான உரிமைகள் குறித்து "பாராளுமன்றத்தின் குரல்" (Voice to Parliament) எனும் ஒரு கமிட்டி அமைக்கப்படும். இக்கமிட்டி பழங்குடியினரின் ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, கல்வி உட்பட அவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து முடிவெடுக்க அரசுக்கும், பாராளுமன்றத்திற்கும் ஆலோசனைகள் வழங்கும் அதிகாரம் பெறும்.
இத்தைகைய ஒரு கமிட்டி அமைவதை மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்கு மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் ஆதரவு கிடைத்தாக வேண்டும் என்பது ஆஸ்திரேலியாவில் ஒரு கட்டாய வழிமுறையாகும்.
இந்த முடிவுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த கமிட்டி உருவானாலும் அது ஒரு சக்தியற்றதாக இருக்கும் எனும் கருத்தும் அங்கு பலம் பெறுகிறது.
அக்டோபர் 14 அன்று வாக்கெடுப்பில் மக்கள் தரப்போகும் முடிவை அரசியல் வல்லுனர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்