search icon
என் மலர்tooltip icon
    • ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    கோவை,

    மதுரையை சேர்ந்த வக்கீல்கள் முகம்மது அப்பாஸ், யூசுப் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு அகில இந்திய வக்கீல்கள் சங்கம், சமூக நீதி வக்கீல்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமை கழகம், இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வக்கீல்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    • சிட்கோ இண்டோசல் மெயின் ரோட்டில்(பேஸ் டூ) போலீஸ் நிலையம் தயாராகி வருகிறது.
    • ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர், 30 காவலர்கள் நியமனம்

    குனியமுத்தூர்,

    கோவை மாநகர எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைப்பதற்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி அந்த 3 பகுதிகளிலும் புதிய போலீஸ் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவை சுந்தராபுரத்தில் சிட்கோ இண்டோசல் மெயின் ரோட்டில்(பேஸ் டூ) போலீஸ் நிலையம் தயாராகி வருகிறது. இந்த போலீஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர், 30 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் ஏதேனும் குற்ற சம்பவம் நடைபெறுமோ என பொதுமக்கள் தயங்கி வந்தனர். தற்போது இங்கு புதிதாக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது என்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் ஆதாமின் ஆனந்தாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
    • கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ஆதாமின் ஆனந்தாஸ் (வயது 56). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சரவணம்பட்டி- விநாயகாபுரம் ரோட்டில் நெல்லையப்பர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆதாமின் ஆனந்தாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஆதாமின் ஆனந்தாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (54). சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த சேகர்(47) என்பவரது மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்றார். மொபட் மருதம்பட்டி அம்மா நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளங்கோ கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த இளங்கோவின் உடலை போலீசார் மீட்டனர்.

    கோவை,

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 36). இவர் கோவை பீளமேடு நேரு நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இளங்கோ நேருநகர் ஐானகியம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இளங்கோ பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இளங்கோவை பணி செய்ய வைத்ததாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ், கட்டிட காண்டிராக்டர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வருகிற 20, 21-ம் தேதிகளில் தேயிலை கண்காட்சி நடக்க உள்ளது.
    • சிறு-குறு தேயிலை விவசாயிகளின் சிறப்பு ரக தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    கோவை,

    உலக தேயிலை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வருகிற 20, 21-ம் தேதிகளில் தேயிலை கண்காட்சி நடக்க உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம், சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகியவை இணைந்து நடத்துகிறது. தேயிலை கண்காட்சியை முன்னிட்டு வருகிற 20-ம்தேதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்ளுகேற்கும் மனித சங்கிலி நடத்தப்படுகிறது.

    குன்னூர் தேயிலை கண்காட்சியை தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் தலைமையில், நீலகிரி எம்.பி ஆ. ராசா முன்னிலையில், தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமசந்திரன் வருகிற 20-ந் தேதி காலை 11 மணி அளவில் திறந்து வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.

    குன்னூர் தேயிலை கண்காட்சியில் தேயிலை தூளின் பல்வேறு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதுதவிர சிறு-குறு தேயிலை விவசாயிகளின் சிறப்பு ரக தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.தேயிலை கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, அங்கு கலப்படம் இல்லாத தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    அடுத்தபடியாக அகில உலக தேயிலை தினத்தை முன்னிட்டு வருகிற 21-ம் தேதி இண்ட்கோசர்வ் சார்பில் பள்ளி- கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கட்டபெட்டு தேயிலை தொழிற்சாலையை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கண்காட்சி அரங்குகளில் தேயிலை தூள் தயாரிக்கும் எந்திரங்களை காட்சிப்படுத்தி, அதன்மூலம் தேயிலை தூள் தயாரிக்கும் முறை குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு, விளக்கம் தரபபட உள்ளது.

    எனவே நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் நடக்கும் தேயிலை கண்காட்சியில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா ப்பயணிகள் கலந்து கொண்டு, கலப்படம் இல்லாத தேயிலை தூளை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

    • 1½ ஆண்டுகளாகியும் ஜல்ஜீவன் திட்ட பணிகள் முடிவடையவில்லை
    • தற்போது 3.50 லட்சம் தண்ணீர் மட்டுமே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கிடைக்கிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 5-வது வார்டுக்குட்பட்ட அம்மன்பு தூரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு ஏராளமான பொது மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

    25 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அதன்பின் பொதுமக்களுக்கு முறை வைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் சத்தி சாலையில் இருந்து அம்மன்புதூர் கிராமத்தில் குடிநீர்விஸ்தரிப்பு செய்யவும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கவும் ரூ.16.25 கோடி மதிப்பில் கடந்த 2020-21 ஆண்டு குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

    இதில் அம்மன்புதூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் பணிகளும், மேல்நிலை தொட்டியும் அமைக்கப்பட்டது. இந்த திட்டபணி தொடங்கி 1½ ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் பழைய திட்டத்தின் படி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வருகிறது.

    இதிலும் தலா ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு குடம் முதல் 2 குடம் மட்டுமே தண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் பயனில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    அம்மன்புதூர் கிராமத்திற்கு அருகாமையில் தான் பவானி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளின் படி பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. ஆற்றின் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் உள்ளோம். ஜல்ஜீவன் திட்டத்தின் படி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தின் படி எடுக்கப்பட்ட திட்டமும் பயனில்லாமல் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    ஏற்கனவே கொடுக்கப்பட்டு வரும் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தண்ணீரை அதிகரிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். மேலும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு 3ஆம் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதிலிருந்து வழியோர கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் மற்றும் திருப்பூர் மேயரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தண்ணீர் தொட்டிக்கு வர ஏற்பாடு செய்வதாக கூறியதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், ஊராட்சிக்கு தினசரி 7 லட்சம் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 3.50 லட்சம் தண்ணீர் மட்டுமே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கிடைக்கிறது. இதனால் ஊராட்சி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது என்றார்.

    • மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல் கண்டறிய சர்வே எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
    • இதுவரை 66 குவாரி குத்தகைதாரர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

    கோவை,

    கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 8 குவாரிகளில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் 12 குவாரிகளில் நில அளவீடு செய்ததில் 8 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

    மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல் கண்டறிய சர்வே எடுத்து அபராதம் விதிக்கப்படும். குவாரி குத்தகைதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நில அளவீடு செய்து எல்லை தூண்கள் நட அறிவுறுத்தப்பட்டது. இதுவரை 66 குவாரி குத்தகைதாரர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

    மேலும், கடந்த 2 மாதங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் கொண்டுசென்றதற்காக சிறப்பு பறக்கும் படையின் மூலம் 15 வாகனங்கள் மற்றும் கனிம வளத்துறையினர் மூலம் 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும், அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக வட்டார போக்குவரத்து அலுவலர்களால் 21 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பலாப்பழங்களை உண்பதற்கு தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வருகின்றன.
    • ஒற்றை காட்டு யானையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பகுதிகளில் அதிக அளவு பலாத்தோட்டங்கள் இருப்பதால் பலாப்பழங்களை உண்பதற்கு தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து யானை, கரடி போன்ற வன விலங்குகள் சாலையில் தற்போது அதிகமாக நடமாடி வருகின்றது . இப்பகுதியில் கடந்த 4 மாதங்களாக சுற்றி தஞ்சமடைந்து வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று அவ்வப்போது சாலையில் செல்லும் வானங்களை சேதப்படுத்தியும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியும் வந்தது. கடந்த ஒரு வாரமாக வாகன ஓட்டிகளின் கண்களில் அகப்படாத அந்த யானை நேற்று மாலை குஞ்சப்பனை பகுதியில் உள்ள சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சிறை பிடித்தது சாலையின் நடுவில் நின்றிருந்த யானையால் அப்பகுதியில் வாகனங்கள் மேலும் கீழும் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் நின்றிருந்த அந்த யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. இந்த ஒற்றை காட்டு யானையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுவதால் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

    • தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.
    • மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும்.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

    கோத்தகிரி சுற்றியுள்ள கூக்கல்தெரை, கக்குச்சி ,கூக்கல், கட்டப்பெட்டு, பில்லிக்கம்பை , தீனட்டி, மானியடா, நெடுகுளா போன்ற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது பண்படுத்தி மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர், முள்ளங்கி, நூல் கோல், பீன்ஸ், பூண்டு, பட்டாணி, அவரை போன்ற மலை காய்கறிகளை விளைவித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

    மேலும் ஒரு சில விவசாயிகள் வெளிநாட்டு காய்கறிகளை சாகுபடி செய்து வருமானம் பெற்று வருகின்றனர். தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பீட்ரூட் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். பீட்ரூட் விளைந்து அறுவடைக்கு தயாரானதை அடுத்து விவசாயிகள் அதனை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் பீட்ரூட்டுக்கான ெகாள்முதல் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பீட்ரூட் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.இதனால் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • புதர் மறைவில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென சஞ்சையை தாக்கியது.
    • இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சஞ்சய்(வயது 16). இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருக்கிறார்.

    தற்போது விடுமுறை என்பதால் சஞ்சய் நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் கொடநாடு செல்லும் சாலை பிரிவில் நெடுகுளா சுண்டட்டியில் உள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தபடி நின்றிருந்தனர். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென சஞ்சையை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • ஒவ்வொரு வீடாக சென்று விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை இடிகரை பேரூராட்சி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் இடிகரை, மணியகாரன்பாளையம், செங்காளிபாளையம், வட்டமலைபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு வீடாக அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார். 

    • சாந்தினிக்கு வருகிற 24-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமம் வன்னி மரத்தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் சாந்தினி (வயது 27). டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சாந்தினிக்கும், ஆர்.வி.புதூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 24-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மேற்கொண்டு வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சாந்தினி தனது வருங்கால கணவரை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறினார். அப்போது அவரது தந்தை நானே கொண்டு சென்று விடுகிறேன் என்றார். ஆனால் அவர் வேண்டாம் நான் தனியாகவே செல்கிறேன் என்று கூறினார். பின்னர் சாந்தினி தனது தம்பியுடன் பொள்ளாச்சிக்கு சென்றார். பின்னர் அவரை அவரது வருங்கால கணவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் பொள்ளாச்சிக்கு திரும்பிய சாந்தினி திடீரென மாயமாகி விட்டார். அவரை அவரது தம்பி பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து சாந்தினியின் தந்தை வடக்கிப்பாளையம் போலீசில் மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நடக்க இருந்த நிலையில் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×